சட்டம் ஒழுங்கு பிரச்சினைகளை திசை திருப்பவே திமுக போராட்டம் - டி.டி.வி தினகரன்
தமிழகத்தில் அடியோடு சீரழிந்திருக்கும் சட்டம் ஒழுங்கு பிரச்னைகளை திசை திருப்பவே திமுக போராட்டம் நடத்துகிறது என டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார்.;
சென்னை,
அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தனது எக்ஸ் வலைத்தளப்பக்கத்தில் வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது,
மாண்புமிகு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்களுக்கு எதிராக தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் இன்று திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அண்ணா பல்கலைக்கழக மாணவி ஒருவர் பாலியல் பலாத்கார வன்கொடுமைக்கு உள்ளான சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை திசை திருப்பவும், பட்டிதொட்டியெங்கும் பரவியிருக்கும் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்களின் தாராளப் புழக்கத்தால் தினந்தோறும் அரங்கேறும் கொலை, கொள்ளை உள்ளிட்ட சட்ட சீர்கேடுகளை மறைத்து திமுக போராட்டம் நடத்தியது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
தமிழகத்தில் குழந்தைகள் முதல் வயதான மூதாட்டி வரை அனைத்து பெண்களுக்கும் பாதுகாப்பற்ற சூழல் நிலவுவதை கண்டித்து எதிர்க்கட்சிகள் நடத்திய போராட்டத்திற்கு அனுமதி மறுத்தது, அதில் பங்கேற்க வந்த தலைவர்களையும் வழிமறித்து கைது செய்த காவல்துறை, இன்று திமுக சார்பில் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்ற திமுகவினரையும் கைது செய்தது ஏன் ? திமுகவை சார்ந்தவர்களே பல்வேறு குற்றச் சம்பவங்களில் ஈடுபடுவதாகவும், குற்றச்சம்பவங்களுக்கு துணைபோவதாகவும் சொல்லப்படும் சூழலில், அனைவருக்கும் பொதுவான காவல் துறை ஆளும் கட்சிக்கு ஆதரவாக செயல்பட்ட, அக்குற்றச்சம்பவங்களில் இருந்து திமுகவினரைப் பாதுகாப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
எனவே, ஆட்சிக்கு முன்பு ஒரு நிலைப்பாடு, ஆட்சிக்கு வந்த பின்பு அதற்கு எதிரான நிலைப்பாடு என இரட்டை நிலைப்பாட்டை திமுக நடத்தும் இந்த அரசியல் கபட நாடகங்களை உன்னிப்பாக கவனித்து வரும் தமிழக மக்கள் விரைவில் அதற்கான எதிர்வினை ஆற்றுவார்கள் என அதில் தெரிவித்துள்ளார்.