பசியை போக்க திமுகவினரும் உணவைத்தான் உண்ண வேண்டும்: அன்புமணி ராமதாஸ்

பசியை போக்க திமுகவினரும் உணவைத்தான் உண்ண வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.;

Update:2025-03-21 12:13 IST
பசியை போக்க திமுகவினரும் உணவைத்தான் உண்ண வேண்டும்: அன்புமணி ராமதாஸ்

சென்னை,

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-

தமிழ்நாடு சட்டசபையில் தர்மபுரியில் சிப்காட் அமைக்க வேண்டும் என்று பாமக சட்டப்பேரவைக் கட்சித் தலைவர் ஜி.கே.மணி விடுத்த கோரிக்கைக்கு எந்த தொடர்பு இல்லாமல் பதிலளித்த பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, தருமபுரியில் சிப்காட் கேட்கும் பாமக திருவண்ணாமலையில் சிப்காட் கூடாது என்கிறது. அப்படியானால் பாமகவுக்கு இரட்டை நாக்கா? என்று வினா எழுப்பியுள்ளார். எத்தனை முறை பதிலளித்தாலும் புரிந்து கொள்ளும் திறன் இல்லாத அமைச்சர் எ.வ.வேலுவை நினைத்து நான் பரிதாபப்படுகிறேன்.

தமிழ்நாட்டில் தொழில் வளர்ச்சிக்கு வழிகோலும் வகையில் சிப்காட் தொழில்பேட்டைகளை அமைக்க வேண்டும் என்பதில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. இன்னும் கேட்டால் தருமபுரி உள்ளிட்ட பல மாவட்டங்களில் சிப்காட் வளாகங்களை அமைக்க வேண்டும் என்று போராடி வெற்றி பெற்றதே பாட்டாளி மக்கள் கட்சி தான். இந்த உண்மைகள் எல்லாம் அரசியலை சேவையாக செய்யாமல், வணிகமாக செய்யும் அமைச்சர் எ.வ.வேலு போன்றவர்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

பாட்டாளி மக்கள் கட்சியின் நிலைப்பாடு மிகவும் தெளிவானது. தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒன்று அல்லது அதற்கும் மேற்பட்ட சிப்காட் வளாகங்கள் தேவை. ஆனால், அதற்காக வேளாண் விளைநிலங்கள் கையகப்படுத்தப்படக்கூடாது என்பது தான் பாட்டாளி மக்கள் கட்சியின் நிலைப்பாடு.

பாமகவுக்கு இரட்டை நாக்கா? என எ.வ.வேலு இப்போது கேட்கவில்லை. மேல்மா உள்ளிட்ட கிராமங்களில் நிலங்களை கையகப்படுத்த முடியவில்லையே? என்ற எரிச்சலில் ஏற்கனவே இப்படிக் கேட்டவர்தான் அவர். 2023-ம் ஆண்டு நவம்பர் 22-ம் தேதி மேல்மாவில் பாமக சார்பில் நடத்தப்பட்ட போராட்டத்தின் போதே அவருக்கு நான் பதில் கூறியிருந்தேன். ஆனாலும், மேல்மா சிக்கலில் அவருக்கு கிடைத்த தோல்வியை மறக்க முடியாததால் மீண்டும், மீண்டும் வயிற்றெரிச்சலை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்.

அமைச்சர் வேலுவாக இருந்தாலும், வேறு எவராக இருந்தாலும் வயிற்றுப் பசியைப் போக்க உணவைத்தான் உண்ண வேண்டும். அதற்கு நிலங்கள் கட்டாயம் தேவை. விளைநிலங்களை அழித்து தொழிற்சாலைகளை அமைத்தால், அதில் உற்பத்தி செய்யப்படும் பொருள்களை உண்டு உயிர்வாழ முடியாது என்பதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். சிப்காட் விவகாரத்தில் பா.ம.க.வுக்கு இரட்டை நாக்கா? என்று கேட்கும் திமுகவுக்கு தமிழகத்தின் முதன்மைச் சிக்கல்களில் எத்தனை வாய்கள்? என்று கேட்டால் எண்ணுவதற்கு எண்கள் இல்லை.

திமுகவின் இரட்டை நிலைப்பாடுகளை பட்டியலிட்டால் பக்கங்கள் போதாது. எனவே, அடுத்தவர்கள் மீது அவதூறு பரப்புவதை கைவிட்டு, சிப்காட் வளாகங்கள் அமைப்பதற்காக விளைநிலங்கள் கையகப்படுத்தப்படாது என்பதை கொள்கை அறிவிப்பாக தமிழக அரசு உடனடியாக வெளியிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்