சேலம் மத்திய சிறையில் கைதிகள் தயாரித்த தீபாவளி பலகாரங்கள் - விற்பனை அமோகம்
சேலம் மத்திய சிறை கைதிகளால் நடத்தப்படும் பிரிசன் பஜார் கடையில், தீபாவளி பலகாரங்களின் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது.;
சேலம்,
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, சேலம் மாநகர் அஸ்தம்பட்டி பகுதியில் உள்ள சேலம் மத்திய சிறைச்சாலையில் கைதிகளால் தயாரிக்கப்பட்ட தீபாவளி பலகாரங்கள் முதல் பல்வேறு உணவு வகைகளின் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. கடந்த 15 நாட்களில் 20-க்கும் மேற்பட்ட கைதிகளைக் கொண்டு தயாரிக்கப்பட்ட பேக்கரி உணவுகள் உள்ளிட்டவை 'பிரிசன் பஜார்' என்ற பெயரில் விற்பனை செய்யப்படுகின்றன.
குறிப்பாக இங்கு தயாரிக்கப்படும் பிரெட், சேலம் அரசு மருத்துவமனை நோயாளிகளுக்கு வழங்கப்படுகிறது. கைதிகள் மத்தியில் நம்பிக்கை ஏற்படுத்தும் இந்த முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. இதில் விற்பனையாகும் உணவுப் பொருட்களின் லாபத்தில் 20 சதவீதம் கைதிகளுக்கே வழங்கப்படுகிறது. கைதிகளால் தயாரிக்கப்பட்ட இனிப்பு கார வகைகளை காவல் துறை அதிகாரிகளும் ஆர்வத்துடன் வாங்கிச் சென்றனர்.