விழுப்புரம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு
விழுப்புரம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார்.;
விழுப்புரம்,
தமிழ்நாடு துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விழுப்புரம் விற்பனைக்குழு - ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தை நேரில் பார்வையிட்டு, விவசாயிகளின் விளைபொருட்களுக்கான தொகை அவர்களின் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படும் நடைமுறைகளை கணினியை இயக்கி ஆய்வு செய்தார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-
தமிழ்நாடு துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறையின் விழுப்புரம் விற்பனைக்குழு ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் பருத்தி எள், நிலக்கடலை (மணிலா) மற்றும் நெல் உள்ளிட்ட விளைபொருட்கள் வைக்கப்பட்டுள்ள கிடங்குகளையும், திறந்த வெளி ஏலக் கொட்டகையில் தரப்பரிசோதனை நடைபெறுவதையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின்போது, ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் நெல் விற்பனை செய்வதற்காக வந்திருந்த பிடாகத்தை சேர்ந்த சக்கரவர்த்தி என்ற விவசாயியிடம் தற்பொழுது நெல் விற்பனை செய்ததற்கான ஏலத்தொகை விவரம், எத்தனை நாட்களுக்குள் தங்களுடைய வங்கி கணக்கில் நெல்லிற்கான தொகை வரவு வைக்கப்படுகிறது என்பது குறித்து துணை முதல்-அமைச்சர் கேட்டறிந்து, அரசு அலுவலர்கள் தெரிவித்த விவரங்களுடன் விவசாயி தெரிவித்த விவரங்கள் சரியாக உள்ளதா என்று ஆய்வு செய்தார்.
மேலும், வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் குடிநீர், கழிப்பறை வசதி, வாகன நிறுத்தும் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்தும், ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில், அன்றாட சந்தை நில விவரம், விளைபொருட்கள் இருப்பு பதிவேடு ஆகியவற்றை பார்வையிட்டும் ஆய்வு மேற்கொண்டார். விவசாயிகள் விற்பனை செய்த விளைபொருட்களுக்கான ஏலத்தொகை அவர்களின் வங்கிக்கணக்கில் இ-நாம் மின்னணு ஏல முறை திட்டத்தின்கீழ், வரவு வைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படுவதை கணினியில் அமர்ந்து கணினி இயக்கி ஆய்வு மேற்கொண்டார். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.