தமிழ்நாட்டில் 8 தொகுதிகள் குறைய காரணம் இதுதான்; மற்ற மாநிலங்களின் நிலை என்ன?

மத்திய அரசின் உத்தரவை பின்பற்றிய மாநிலங்களுக்கு தொகுதிகள் குறைய உள்ளது.;

Update:2025-02-26 13:02 IST
தமிழ்நாட்டில் 8 தொகுதிகள் குறைய காரணம் இதுதான்; மற்ற மாநிலங்களின் நிலை என்ன?

உலகிலேயே மிகப்பெரிய ஜனநாயக நாடு என்ற பெருமையை பெற்ற இந்தியாவில் 28 மாநிலங்கள், 8 யூனியன் பிரதேசங்கள் இருக்கின்றன. மொத்தம் 543 நாடாளுமன்ற தொகுதிகள் உள்ளன.

அதிகபட்சமாக உத்தரபிரதேசத்தில் 80 தொகுதிகள் இருக்கின்றன. அடுத்த 4 இடங்களில், மராட்டியம் 48, மேற்கு வங்காளம் 42, பீகார் 40, தமிழ்நாடு 39 தொகுதிகளை கொண்டிருக்கின்றன.

இந்த தொகுதிகள் எல்லாம் 2011-ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி வடிவமைக்கப்பட்டவை. அப்போது, நாட்டில் இருந்த மக்கள்தொகை 121 கோடியே 5 லட்சம். அந்த நேரத்திலேயே, நாட்டில் அபரிமிதமான மக்கள்தொகையை கட்டுப்படுத்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது. மாநில அரசுகளையும் பின்பற்ற வலியுறுத்தியது.

அந்த காலக்கட்டத்தில்தான், "நாம் இருவர்; நமக்கு இருவர்" என்ற கோஷம் நாடு முழுவதும் ஓங்கி ஒலித்தது. இதை தமிழக அரசும் கையில் எடுத்து, மாநிலத்தில் மக்கள்தொகையை கட்டுப்படுத்த பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டது. அதன்படி, தமிழ்நாடு உள்பட பல்வேறு மாநிலங்கள் மக்கள்தொகையை கட்டுப்படுத்தி இருக்கின்றது. ஆனால், மத்திய அரசின் கோரிக்கையை மதிக்காத பல மாநிலங்களில் மக்கள்தொகை அதிகரித்து இருக்கின்றது.

 

இன்றைக்கு இந்தியாவின் மக்கள்தொகை 145 கோடியை கடந்து உலக அளவில் முதலிடம் பிடித்துள்ளது. நீண்ட பல காலமாக முதலிடத்தில் இருந்த சீனா, 2-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.

இப்போது பிரச்சினை என்னவென்றால், மக்கள்தொகையை கட்டுப்படுத்துவதில் மத்திய அரசின் உத்தரவை மதித்து நடந்து கொண்ட மாநிலங்களுக்கு புதிய சிக்கல் உருவாகியுள்ளது. அதாவது, அடுத்த ஆண்டு (2026) மத்திய அரசு நாடாளுமன்ற தொகுதி மறுசீரமைப்பை மேற்கொள்ள இருக்கின்றது.

தொகுதி மறுசீரமைப்பு என்பது மக்கள்தொகை அடிப்படையில்தான் மேற்கொள்ளப்படும். அப்படி பார்க்கும்போது, தமிழ்நாட்டில் மக்கள்தொகை உயர்வு கட்டுப்படுத்தப்பட்டிருப்பதால், 8 நாடாளுமன்ற தொகுதிகள் குறையும் நிலை ஏற்பட்டுள்ளது. அதாவது, 39 தொகுதிகளில் இருந்து 31 தொகுதிகளாக குறைய வாய்ப்பு இருக்கிறது.

 

இதனால், தமிழ்நாட்டுக்கான மத்திய அரசின் நிதி பகிர்வு குறைவதுடன், நாடாளுமன்றத்தில் தமிழக எம்.பி.க்களின் எண்ணிக்கையும் குறையும். இது, நாடாளுமன்றத்தில் தமிழக மக்களுக்காக ஒலிக்கும் குரலை குறையச் செய்துவிடும்.

எனவே, இந்த பிரச்சினை குறித்து உடனடியாக விவாதிப்பதற்காக தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அடுத்த மாதம் (மார்ச்) 5-ந் தேதி சென்னை தலைமைச்செயலகத்தில் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டியிருக்கிறார். இதில் பங்கேற்க இந்திய தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட 45 கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

சரி, இனி மக்கள்தொகை குறைப்பு நடவடிக்கையில் ஈடுபடாத எந்தெந்த மாநிலங்களுக்கு தொகுதிகள் அதிகரிக்கிறது?, அதை முறையாக பின்பற்றிய எந்தெந்த மாநிலங்களுக்கு தொகுதிகள் குறைகிறது? என்பதை தொடர்ந்து பார்ப்போம்.

 

அசாம் (18), மராட்டியம் (48) ஆகிய 2 மாநிலங்களுக்கு தொகுதி மறு சீரமைப்பால் எந்த பாதிப்பும் இருக்காது என்று தெரியவந்துள்ளது.

அதே நேரத்தில், தமிழ்நாட்டில் 39 தொகுதிகள் 31 ஆக குறையும் நிலை ஏற்பட்டுள்ளது. இதேபோல், ஆந்திரா - தெலுங்கானா 42-ல் இருந்து 34 ஆகவும், கேரளா 20-ல் இருந்து 12 ஆகவும், மேற்கு வங்காளம் 42-ல் இருந்து 38 ஆகவும், ஒடிசா 21-ல் இருந்து 18 ஆகவும், கர்நாடகா 28-ல் இருந்து 26 ஆகவும், இமாச்சல பிரதேசம் 4-ல் இருந்து 3 ஆகவும், பஞ்சாப் 13-ல் இருந்து 12 ஆகவும், உத்தரகாண்ட் 5-ல் இருந்து 4 ஆகவும் தொகுதிகளை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

 

அதேநேரத்தில், உத்தரபிரதேசம் 80-ல் இருந்து 91 ஆக தொகுதிகளை அதிகரித்துக்கொள்கிறது. அதேபோல், பீகார் 40-ல் இருந்து 50 ஆகவும், ராஜஸ்தான் 25-ல் இருந்து 31 ஆகவும், மத்திய பிரதேசம் 29-ல் இருந்து 33 ஆகவும், ஜார்கண்ட் 14-ல் இருந்து 15 ஆகவும், அரியானா 10-ல் இருந்து 11 ஆகவும், குஜராத் 26-ல் 27 ஆகவும், டெல்லி 7-ல் இருந்து 8 ஆகவும், சத்தீஸ்கர் 11-ல் இருந்து 12 ஆகவும் தொகுதிகளை அதிகரித்துக்கொள்கிறது.

அதாவது, 10 ஆண்டுகளுக்கு முன்பு மத்திய அரசு அறிவுறுத்திய மக்கள்தொகை குறைப்பு நடவடிக்கையை பின்பற்றாத மாநிலங்களில் தொகுதிகள் அதிகரிக்கப் போகிறது. மத்திய அரசின் உத்தரவை பின்பற்றிய மாநிலங்களுக்கு தொகுதிகள் குறைய உள்ளது. எனவே, மத்திய அரசு இந்த விஷயத்தில் ஒரு நல்ல முடிவை எடுக்கவேண்டும் என்பதே நாட்டு மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்