மின் கம்பத்தில் தேன் கூடு: ருசிக்க சென்ற கரடி மின்சாரம் தாக்கி பலி
மின் கம்பத்தில் உள்ள தேனை ருசிக்க சென்ற கரடி மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தது.;

நீலகிரி மாவட்டம் குன்னூரில் அருகே சமீப காலமாக கரடிகளின் எண்ணிக்கை அதிகமாக காணப்படுகிறது. இந்த கரடிகள் குறிப்பாக உணவு மற்றும் தண்ணீர் தேடி குடியிருப்பு பகுதிகளில் சர்வ சாதாரனமாக உலா வருகிறது. இதனால் தேயிலை தோட்டத்தில் வேலை செய்து வருபவர்கள் அச்சத்தில் உள்ளனர்
இந்த நிலையில் நான்செட் பகுதியில் உள்ள வரதராஜன் என்பவரின் வீட்டிற்கு அருகே கரடி ஒன்று சுற்றித்திரிந்தது. அப்போது அங்கு ஒரு மின்கம்பத்தின் மேல் தேன் கூடு இருப்பதை பார்த்த கரடி மின்கம்பத்தில் ஏறியது.
தேனை ருசிக்க சென்ற கரடியின் உடல் மின்கம்பியில் உரசி மின்சாரம் தாக்கி கீழே விழுந்து பரிதாபமாக உயிரிழந்தது. இது குறித்து தகவலறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று கரடியின் உடலை மீட்டனர். பிரேத பரிசோதனை செய்யப்பட்டு பின்னர் கரடியின் உடலானது தகனம் செய்யப்பட்டது.
மேலும் இது 5 வயது மதிக்கத்தக்க ஆண் கரடி என தெரியவந்துள்ளது. தேனை ருசிக்க வந்த கரடி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.