டெல்லி கணேஷின் மரணம் கலையுலகிற்கு பேரிழப்பு: துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இரங்கல்
நடிகர் டெல்லி கணேஷ் மறைவுக்கு துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
சென்னை,
வயது முதிர்வு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக நடிகர் டெல்லி கணேஷ் (80 வயது) இன்று காலமானார். சென்னை ராமாபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் அவரது உயிர் பிரிந்தது. டெல்லி கணேஷின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது. அவரது மறைவுக்கு திரைத்துறையினர் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் நடிகர் டெல்லி கணேஷ் மறைவுக்கு துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், "திரையுலகின் மூத்த கலைஞர் டெல்லி கணேஷ் சார் உடல்நலக்குறைவால் மறைந்த செய்தியறிந்து மிகுந்த வேதனையுற்றேன்.
மேடை நாடகங்களில் தொடங்கி 400-க்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்தவர். குணச்சித்திரம், நகைச்சுவை, வில்லன் என, தான் ஏற்று நடித்த அனைத்து கதாபாத்திரங்களிலும் தன் முத்திரையை பதித்தவர். சின்னத்திரையிலும் தன்னுடைய நடிப்பாளுமையை வெளிப்படுத்திய திறமைக்கு சொந்தக்காரர். அவரின் மரணம் கலையுலகிற்கு பேரிழப்பு.
டெல்லி கணேஷ் சாரின் மரணத்துக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். அவரது மறைவால் வாடும், குடும்பத்தார், நண்பர்கள், கலையுலகினர் அனைவருக்கும் என்னுடைய ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.