'மழை வெள்ளத்தை அரசியலாக்க சிலர் முயற்சி செய்கின்றனர்' - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

மழை வெள்ளத்தை சிலர் அரசியலாக்க முயற்சிக்கின்றனர் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

Update: 2024-10-17 06:55 GMT

சென்னை,

சென்னையில் மழையால் பாதிக்கப்பட்ட பல்வேறு பகுதிகளுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில், இன்று மு.க.ஸ்டாலின் தனது சொந்த தொகுதியான கொளத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு சென்று ஆய்வு செய்தார்.

அங்குள்ள ரெட்டேரி ஏரியை தூர்வாரி குடிநீர் தேவைக்காக பயன்படுத்தும் வகையில் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், அந்த திட்டப்பணிகளின் தற்போதைய நிலவரம் குறித்து அதிகாரிகளிடம் அவர் கேட்டறிந்தார். பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் விரைவில் பணிகளை முடிக்க வேண்டும் என அவர் அறிவுறுத்தினார்.

தொடர்ந்து கொளத்தூர் தொகுதியில் உள்ள வீனஸ் நகர், ரெட்டேரி, பாலாஜி நகர், தணிகாசலம் உள்ளிட்ட பகுதிகளில் முதல்-அமைச்சர் ஆய்வு செய்தார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது செய்தியாளர்களின் கேள்விக்கு முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் அளித்த பதில்கள் வருமாறு:

கேள்வி – வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்கிறார்கள்

பதில்: இதை அரசியலாக மாற்றத்தான் முயற்சி செய்கிறார்கள். எவ்வளவு நன்மையெல்லாம் நடந்திருக்கிறது, என்ன பணிகள் நடந்திருக்கிறது என்பதெல்லாம் மக்களுக்குத் தெரியும்.

கேள்வி – வடகிழக்குப் பருவமழைக்கு இன்னும் 2 மாதங்கள் இருக்கிறதே?

பதில்: எவ்வளவு மழை வந்தாலும் சமாளிப்பதற்கு இந்த அரசு தயாராக இருக்கிறது. ஏற்கனவே சொல்லியிருக்கிறோம். தொடர்ந்து நாங்கள் அதற்கான பணிகளை செய்துகொண்டு இருக்கிறோம்.

கேள்வி – மழைக்கான பணிகள் குறித்து எதிர்மறையான விமர்சனங்கள் வருகிறது. அதைப் பற்றி உங்கள் கருத்து?

பதில் – அதைப் பற்றி நான் கவலைப்படவில்லை. இருந்தால் தானே கவலைப்படவேண்டும். அதுபோன்று சூழ்நிலை கிடையாது. இப்போது மக்கள் திருப்தியாக இருக்கிறார்கள். இன்றைக்கு தினந்தந்தி பத்திரிகையை படித்துப்பாருங்கள். அது எங்கள் பத்திரிகை கிடையாது. அந்த பத்திரிகையில் மக்களிடம் பேட்டியெடுத்து பதிவிட்டிருக்கிறார்கள். அதை படித்துப்பாருங்கள்.

கேள்வி – சென்னையில் தேங்கியிருக்கும் மழைநீர் அனைத்து இடங்களிலும் வடிந்துவிட்டதா?

பதில் – எங்களுக்குத் தெரிந்த வரை எல்லா இடங்களிலும் மழைநீர் வடிந்துவிட்டது. எங்களுக்கு தெரியாமல் சில இடங்களில் இருந்தாலும், அதிலும் உரிய கவனம் செலுத்தி, அதையும் எடுப்பதற்கான முயற்சிகள் செய்துகொண்டிருக்கிறோம்.

கேள்வி – மாநகராட்சி ஊழியர்களின் பணிகள் எல்லாம் எப்படி இருந்தது சார்?

பதில் – மிகவும் சிறப்பாக, மிகவும் பெருமைப்படக்கூடிய அளவிற்கு, மக்கள் பாராட்டக் கூடிய அளவிற்கு இருந்திருக்கிறது. அதற்காக மாநகராட்சி அதிகாரிகளுக்கு மட்டுமல்லாமல் ஊழியர்கள்மற்றும் தூய்மைப் பணியாளர்களுக்கும் அதே போன்று, மற்ற துறை அதிகாரிகளுக்கும், அலுவலர்களுக்கும் நான் நன்றி கூறியுள்ளேன். வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளேன்.

கேள்வி – சமூக ஊடகங்களில் நிறைய பாராட்டுகள் வந்த வண்ணம் இருக்கிறதே?

பதில் – பாராட்டுகளும் வருகிறது. அதே நேரத்தில் அதை counter செய்வதற்காக, தாங்கிக்கொள்ள முடியாதவர்கள் விமர்சனம் செய்துகொண்டிருக்கிறார்கள். அதைப் பற்றி நாங்கள் கவலைப்படவில்லை. எங்கள் பணி மக்கள் பணி. அந்தப் பணிகளைத்தான் நாங்கள் தொடர்ந்து செய்துக்கொண்டிருக்கிறோம்.

கேள்வி – அரசின் முழுத் திறனையும் பயன்படுத்தும் அளவிற்கு மழை அளவு இருந்ததா?

பதில் – நிச்சயமாக இருந்தது. அதில் எந்தவித சந்தேகமும் கிடையாது. எந்தப் பிரச்சினையும் கிடையாது.

Tags:    

மேலும் செய்திகள்