பெண் காவலர்கள் உயிரிழப்பு - ஆவடி காவல் ஆணையர் விளக்கம்
எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியின் குற்றச்சாட்டுக்கு, ஆவடி காவல் ஆணையர் சங்கர் மறுப்பு தெரிவித்துள்ளார்.
சென்னை,
மாதவரம் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயஸ்ரீ (வயது 28) மற்றும் அதே போலீஸ் நிலையத்தில் முதல் நிலை காவலராக பணியாற்றிய நித்யா (வயது 35) 2 பேரும் செங்கல்பட்டு அருகே இன்று அதிகாலை 2 மணி அளவில் நிகழ்ந்த சாலை விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இது தொடர்பாக அறிக்கை வெளியிட்ட எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, குற்றவாளிகளை பிடிக்கச்சென்றபோது இருவரும் உயிரிழந்ததாகவும், அரசின் அலட்சியத்தால் அவர்கள் உயிரிழந்ததாகவும் குற்றம்சாட்டியிருந்தார். இந்த நிலையில், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியின் குற்றச்சாட்டு, ஆவடி காவல் ஆணையர் சங்கர் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
04.11.2024 இன்று காலை சுமார் 2 மணியளவில் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயஸ்ரீ மற்றும் முதல் நிலை காவலர் நித்யா ஆகியோர் இருசக்கர வாகனத்தில் சென்னையிலிருந்து திருச்சி நெடுஞ்சாலையில் மேல்மருவத்தூர் பத்மாவதி திருமண மண்டபம் அருகே சென்று கொண்டிருந்தனர். அப்போது திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூர் தாலுகா குன்னக்குப்பம் கிராமத்தை சேர்ந்த மதன்குமார் என்பவர் ஓட்டி வந்த கார் அவர்கள் மீது மோதியதில் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயஸ்ரீ சம்பவ இடத்திலேயே இறந்துள்ளார். மேலும் பலத்த காயம் அடைந்த முதல்-நிலை காவலர் நித்யா செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தநிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
உதவி ஆய்வாளர் ஜெயஸ்ரீ மதுரையைச் சேர்ந்தவர். நித்யா திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர். இவர்கள் இருசக்கர வாகனத்தில் தொலைதூர பயணங்கள் மேற்கொள்ளும் பழக்கம் கொண்டவர்கள்.ஜெயஸ்ரீ அண்மை காலத்தில் இருசக்கர வாகனத்தில் லடாக் சென்று வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. முதல்-நிலை காவலர் நித்யா கடந்த 2ம் தேதி முதல் 4ம் தேதி வரை தற்செயல் விடுப்பில் இருந்து வருகிறார். சாலை விபத்தில் உயிரிழந்த பெண் காவலர்கள் இருவரும் அலுவலக பணி ரீதியாக செல்லவில்லை.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.