'பீப் பிரியாணி விற்கக்கூடாது' - மிரட்டல் விடுத்த பாஜக பிரமுகர் மீது வழக்குப்பதிவு
பாஜக பிரமுகர் மீது 4 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.;
கோவை,
கோவை மாவட்டம் உடையம்பாளையம் பகுதியை சேர்ந்த ரவி - ஆபிதா தம்பதியினர், அதே பகுதியில் தள்ளுவண்டியில் பீப் பிரியாணி, பீப் சில்லி கடை நடத்தி வருகின்றனர். இவர்களை அந்த பகுதியை சேர்ந்த பாஜக பிரமுகர் ஒருவர், இங்கே பீப் பிரியாணி, பீப் சில்லி ஆகியவற்றை விற்கும் கடைகளை இங்கு நடத்தக்கூடாது என மிரட்டியுள்ளார்.
இதனை ரவி - ஆபிதா தம்பதியினர் வீடியோ பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். இந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலானது. மேலும் இச்சம்பவத்தை தொடர்ந்து இவர்கள் சற்று தள்ளி கடையை போட்டுள்ளனர். அந்த பகுதியில் கடை போடுவதற்கு அனுமதி அளித்து பாதுகாப்பு அளித்தால் மட்டும் போதும் என போலீசாரிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.
இந்த நிலையில், சாலையோர பீப் பிரியாணி கடைக்கு சென்று மிரட்டல் விடுத்த பாஜக பிரமுகர் மீது 4 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கடை உரிமையாளர் அளித்த புகாரின் பேரில், உடையாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த பாஜக பிரமுகர் சுப்பிரமணி மீது துடியலூர் காவல் நிலையத்தில் 126(2), 192, 196 மற்றும் 351/2 ஆகிய நான்கு பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.