இயக்குநர் பா.ரஞ்சித், பாடகி இசைவாணி மீது அய்யப்ப பக்தர்கள் சங்கத்தினர் புகார்
இயக்குநர் பா.ரஞ்சித், பாடகி இசைவாணி மீது அய்யப்ப பக்தர்கள் சங்கத்தினர் புகார் அளித்துள்ளனர்.;
கோவை,
இயக்குநர் பா.ரஞ்சித், கானா பாடகி இசைவாணி ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அனைத்து அய்யப்ப பக்தர்கள் சங்கத் தலைவர் செல்வராஜ் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட அய்யப்ப பக்தர்கள், மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் புகார் மனு அளித்தனர்.
அந்த மனுவில், அய்யப்ப சுவாமி குறித்தும், அய்யப்ப பக்தர்கள் மேற்கொள்ளும் விரதங்களை கொச்சைப்படுத்தும் வகையிலும் கானா பாடகி இசைவாணி பாடிய பாடலை நீலம் கலாசார மையம் வெளியிட்டுள்ளதாகவும், இது பக்தர்களின் மனதை புண்படுத்தும் வகையில் உள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.
எனவே பாடகி இசைவாணி மற்றும் பா.ரஞ்சித் தலைமையிலான நீலம் கலாச்சார மையம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புகாரின்பேரில் மேட்டுப்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.