நடிகை கஸ்தூரி முன் ஜாமீன் கோரி ஐகோர்ட்டில் மனு தாக்கல்

நடிகை கஸ்தூரி தலைமறைவானதாக கூறப்படும் நிலையில், அவரை தேடும் பணியை போலீஸ் தீவிரப்படுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Update: 2024-11-11 07:01 GMT

மதுரை,

கடந்த சில தினங்களுக்கு முன்பாக இந்து மக்கள் கட்சி சார்பில் சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய நடிகை கஸ்தூரி, தெலுங்கு பேசும் மக்கள் குறித்து கூறிய கருத்து சர்ச்சையானது. இதையடுத்து, தனது கருத்துக்கு கஸ்தூரி மன்னிப்பு கோரினார். எனினும் மதுரை, ஆண்டிபட்டி போன்ற பகுதிகளில் உள்ள காவல் நிலையங்களில் கஸ்தூரி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதேபோல், அகில இந்திய தெலுங்கு சம்மேளன அமைப்பு சார்பில் நடிகை கஸ்தூரி மீது அளித்த புகாரின் அடிப்படையில், கலவரத்தை தூண்டுதல் உட்பட நான்கு பிரிவுகளின் கீழ், சென்னை எழும்பூர் காவல் நிலையத்தில் கஸ்தூரி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த நிலையில் விசாரணைக்கு வரும்படி, சம்மன் வழங்கச் சென்றபோது கஸ்தூரியின் வீடு பூட்டியிருந்ததாக போலீசார் தெரிவித்தனர். கஸ்தூரியின் செல்போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. இதனால், நடிகை கஸ்தூரி தலைமறைவாக இருப்பதாக சொல்லப்படுகிறது.

கஸ்தூரியை தனிப்படை போலீசார் இரண்டாவது நாளாக தேடி வரும் நிலையில், அவர் ஐதராபாத்திற்கு அவ்வப்போது சென்று வந்ததால் அங்கு இருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதனிடையே, முன் ஜாமீன் கோரி ஐகோர்ட்டு மதுரை கிளையில் கஸ்தூரி மனு தாக்கல் செய்துள்ளார். உள்நோக்கத்தோடு தன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக கஸ்தூரி தனது முன் ஜாமீன் மனுவில் குறிப்பிட்டுள்ளார். கஸ்தூரி தாக்கல் செய்த முன் ஜாமீன் மனு, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு நாளை விசாரணைக்கு வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்