மருத்துவத்துறையில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை - ஓ.பன்னீர் செல்வம் வலியுறுத்தல்

மருத்துவத் துறையில் காலியாக உள்ள அனைத்துப் பணியிடங்களையும் போர்க்கால அடிப்படையில் நிரப்பிட வேண்டும் என ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்

Update: 2024-11-13 06:10 GMT

சென்னை,

முன்னாள் முதல்-அமைச்சர் ஓ பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

மருத்துவத் துறையில் மருத்துவர், செவிலியர் உள்ளிட்ட காலிப் பணியிடங்களை நிரப்புவது தொடர்பாக நீதிமன்றத்தில் பலர் வழக்கு தொடுத்து இருப்பதாகவும், அந்த வழக்குகள் முடிவுக்கு வந்த வந்த பின்தான் பணி நியமனம் மேற்கொள்ள முடிகிறது என்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் பேட்டி அளித்திருப்பது "ஆடத் தெரியாதவருக்கு அரங்கம் கோணல்" என்ற பழமொழியைத்தான் உணர்த்துகிறது.

பணி நியமனமாக இருந்தாலும், பணி மாற்றமாக இருந்தாலும் சரி, பதவி உயர்வாக இருந்தாலும் சரி, பாதிக்கப்பட்டவர்கள் நீதிமன்றங்களை நாடுவது என்பது அவர்களுடைய தனிப்பட்ட உரிமை. கட்சி வித்தியாசமின்றி அனைத்து ஆட்சிக் காலங்களிலும் நடைபெற்று வருவதுதான். ஆனால், அந்த வழக்குகளை விரைந்து முடிப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது அரசாங்கத்தினுடைய கடமை. அந்தக் கடமையை செய்ய தி.மு.க. அரசு தவறிவிட்டது. அரசு மருத்துவமனைகளில் பணியிடங்கள் காலியாக இருப்பது உண்மைதான் என்று ஒத்துக்கொள்ளும் அமைச்சர் அவர்கள், மருத்துவத் துறையில் ஏராளமான காலிப் பணியிடங்கள் இருப்பது போன்ற மாயத் தோற்றம் உருவாக்கப்பட்டு வருவதாக கூறுவது முன்னுக்குப்பின் முரணாக உள்ளது.

மருத்துவர்கள் மற்றும் மருத்துவம் சார்ந்த பணியாளர்கள் ஓய்வு பெறுவதாலோ அல்லது பணியை விட்டு நீங்குவதாவோ ஏற்படும் காலி இடங்கள் உடனுக்குடன் நிரப்பப்பட வேண்டியது மிகவும் அவசியம் ஆகும். இதில் தொய்வு ஏற்பட்டால், உயிரிழப்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். இதனைக் கருத்தில் கொண்டு, மக்கள் படும் துன்பங்களை, கஷ்டங்களை நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞர்கள் மூலம் எடுத்துரைத்து வழக்கினை விரைந்து முடிவுக்கு கொண்டுவர தி.மு.க அரசு நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். ஆனால், தி.மு.க. அரசு செய்யவில்லை. மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட காலிப் பணியிடங்கள் அனைத்தையும் உடனுக்குடன் நிரப்பிவிட்டால், கூடுதல் செலவு அரசுக்கு ஏற்படும் என்பதுதான் காரணமாக சொல்லப்படுகிறது. மூன்றரை இலட்சம் அரசு காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும் என்ற வாக்குறுதியில் பதினைந்து விழுக்காடு கூட நிறைவேற்றப்படாததற்கும் இதுதான் காரணமாக சொல்லப்படுகிறது.

ஆண்டிற்கு ஒரு இலட்சம் கோடி ரூபாய் அளவிற்கு உயர்த்தப்பட்ட அனைத்து வரிகளின் மூலம் வருமானம் வருகின்ற நிலையிலும், இதுபோன்றதொரு நடவடிக்கையை தி.மு.க. அரசு எடுத்திருப்பது மக்களின் உயிருடன் விளையாடுவதற்குச் சமம். இதற்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்தும் கொள்கிறேன். மருத்துவத் துறையில் உள்ள காலிப் பணியிடங்களை முன்கூட்டியே கணக்கிட்டு, பணியாளர்களை விரைந்து தேர்ந்தெடுக்கும் வகையில் மருத்துவத் துறை பணியாளர் தேர்வு வாரியத்தை தனியாக அமைந்து பொதுமக்களின் உயிரைக் காத்தவர் புரட்சித் தலைவி அம்மா அவர்கள். ஆனால், கூடுதல் நிதிச் சுமை ஏற்பட்டுவிடுமே என்பதற்காக, நீதிமன்ற வழக்குகளை மேற்கோள்காட்டி, மருத்துவத் துறையில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப இயலவில்லை என்று சாக்குபோக்கு கூறும் ஆட்சியாக தி.மு.க. ஆட்சி விளங்கிக் கொண்டிருக்கிறது. தி.முக அரசின் நிர்வாகத் திறமையின்மைக்கு இது ஓர் எடுத்துக்காட்டு, தி.மு.க. அரசின் இந்தச் செயல் மக்களை கொடுமைப்படுத்துவதற்குச் சமம். நிதியை காரணம் காட்டி, மக்களுக்கு நீதி வழங்க மறுக்கிறது என்பதே தி.மு.க. அரசின்மீது மக்கள் வைக்கும் குற்றச்சாட்டு தமிழக மக்கள் அனைவரும் நோயற்ற நல்வாழ்வு வாழ, மருத்துவத் துறையில் காலியாக உள்ள அனைத்துப் பணியிடங்களையும் போர்க்கால அடிப்படையில் நிரப்பிட நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.என தெரிவித்துள்ளார் . 

Tags:    

மேலும் செய்திகள்