ஜனாதிபதி திரவுபதி முர்மு நாளை தமிழகம் வருகை

ஜனாதிபதி திரவுபதி முர்மு நாளை தமிழகம் வருகிறார்.;

Update:2024-11-26 02:55 IST

சென்னை,

ஜனாதிபதி திரவுபதி முர்மு, பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக 4 நாட்கள் பயணமாக தமிழ்நாட்டிற்கு நாளை (புதன்கிழமை) வருகிறார். அவர் நாளை டெல்லியில் இருந்து விமானம் மூலம் கோவை மாவட்டம் சூலூர் விமானப்படை தளத்திற்கு வருகிறார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உள்ள ராஜ்பவனுக்கு வந்து தங்குகிறார்.

நாளை மறுநாள்(வியாழக்கிழமை) ஊட்டியில் இருந்து ஜனாதிபதி திரவுபதி முர்மு கார் மூலம் குன்னூர் வெலிங்டனில் உள்ள ராணுவ பயிற்சி கல்லூரிக்கு சென்று, அங்கு நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்று பேசுகிறார். 29-ந் தேதி ராஜ்பவனில் ஓய்வெடுக்கும் அவர், 30-ந் தேதி காலை ஹெலிகாப்டர் மூலம் கோவை சூலூர் விமானப்படை தளத்துக்கு சென்று, அங்கிருந்து விமானம் மூலம் திருச்சி செல்கிறார்.

இதன் பின்னர் அங்கிருந்து திருவாரூர் செல்லும் ஜனாதிபதி திரவுபதி முர்மு, அங்குள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் நடைபெறும் 9-வது பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்கிறார். பின்னர் திருச்சி விமான நிலையத்தில் இருந்து விமானம் மூலம் டெல்லி புறப்படுகிறார். ஜனாதிபதி திரவுபதி முர்மு வருகையையொட்டி குன்னூர் ராணுவ முகாமில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. அங்கு துப்பாக்கி ஏந்திய போலீசார் சுழற்சி முறையில் கண்காணிப்பு பணியில் ஈடுபடுகின்றனர். ஜனாதிபதி வருகையையொட்டி நீலகிரியில் டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்