ஆறுதல் கூற சென்றோர் மீது வன்கொடுமை வழக்கா..? ராமதாஸ் கண்டனம்

தி.மு.க.வுக்கு பாட்டாளி மக்கள் மறக்க முடியாத பாடத்தை புகட்டுவார்கள் என்பது உறுதி என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

Update: 2024-11-07 06:34 GMT

கோப்புப்படம்

சென்னை,

பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கடலூர் மாவட்டம் புவனகிரியை அடுத்த மஞ்சக்கொல்லையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினரால் கொலைவெறித் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்ட செல்லத்துரை என்ற இளைஞரின் குடும்பத்தினரையும், ஊர்மக்களையும் சந்தித்து ஆறுதல் கூறுவதற்காக சென்ற பா.ம.க. மாவட்ட செயலாளர் செல்வமகேஷ் உள்ளிட்ட 10 பேர் மீது எஸ்.சி/எஸ்.டி வன்கொடுமை சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கது. தமிழ்நாட்டில் மக்களாட்சிக்கு பதிலாக களப்பிரர்கள் ஆட்சியின் நீட்சியை விட மிக மோசமான ஆட்சி நடைபெறுவதைத் தான் அற்பத்தனமான இந்த அடக்குமுறைகள் நிரூபிக்கின்றன.

கடலூர் மாவட்டத்தில் வன்னிய மக்கள் மீது இப்படி ஒரு வன்கொடுமை கட்டவிழ்த்து விடப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில், அதையெல்லாம் தட்டிக் கேட்க வேண்டிய தமிழக முதல்-அமைச்சர் ஸ்டாலின் அவர்கள், ரோம் நகரம் பற்றி எரிந்து கொண்டிருந்த போது பிடில் வாசித்துக் கொண்டிருந்த நீரோ மன்னனைப் போல கோவையில் செந்தில் பாலாஜியின் 'கம்பேக்'கை கொண்டாடிக் கொண்டிருக்கிறார்.

தமிழ்நாட்டின் குடிமகன் என்ற முறையில் செல்லத்துரைக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தான் முதல் ஆளாக கண்டித்திருக்க வேண்டும்; நீதி வழங்கியிருக்க வேண்டும். ஆனால், அவருக்குள் எப்போதும் எரிந்து கொண்டிருக்கும் வன்னியர் விரோத நெருப்பு அதைத் தடுத்து விட்டது. கடலூர் மாவட்டத்தில் நடக்கும் நிகழ்வுகளையும், காவல்துறையினரின் செயல்பாடுகளையும் வைத்துப் பார்க்கும் போது தமிழ்நாட்டில் நடப்பது களப்பிரர்கள் ஆட்சியின் நீட்சியாகவே தோன்றுகிறது.

ஆட்சியாளர்களின் அடக்குமுறைகளையும், பொய்வழக்குகளையும் எதிர்கொள்வது பாட்டாளி மக்கள் கட்சிக்கு ஒன்றும் புதிதல்ல. பாட்டாளி மக்கள் கட்சி தொடங்கப்படுவதற்கு முன்பாகவே காவல்துறையை கட்டவிழ்த்து விட்டு எனது திண்டிவனம் வீட்டில் காவல்படைகளை குவித்து எனது வீட்டை சோதனை செய்ததாக செய்தி பரப்பியது, பு.தா. அருள்மொழி உள்ளிட்ட பலரை குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தது, விழுப்புரத்தில் பாட்டாளி தொழிற்சங்கம் நடத்திய பேரணியில் ஒடுக்குமுறையை கட்டவிழ்த்து விட்டது, கடலூர் புதுச்சத்திரத்தில் ராஜேந்திரன் என்ற தொண்டரை துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்தது உள்ளிட்ட ஏராளமான அடக்குமுறைகளை 1989-ஆம் ஆண்டில் அன்றைய முதல்-அமைச்சர் கலைஞர் கட்டவிழ்த்து விட்டார். அன்று தந்தை செய்ததை இன்று தனயன் செய்கிறார். அவ்வளவு தான்.

தி.மு.க. அரசின் அடக்குமுறைகளையும், பொய்வழக்குகளையும் முறியடிக்கும் திறனும், உறுதியும் பாட்டாளி மக்கள் கட்சிக்கு உண்டு. அதேநேரத்தில் வன்னியர்களுக்கு எதிராக தாக்குதல்களை கட்டவிழ்த்து விடும் கும்பலை வன்னியர் வன்ம மனநிலையுடன் ஆதரித்துக் கொண்டிருக்கும் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க.வுக்கு பாட்டாளி மக்கள் மறக்க முடியாத பாடத்தை புகட்டுவார்கள் என்பது உறுதி

இவ்வாறு அதில் தெரிவிகப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்