ராமநாதபுரம் அருகே பெண்ணை கூட்டாக பாலியல் பலாத்காரம் செய்த 4 பேர் கைது
ராமநாதபுரம் அருகே பெண்ணை கூட்டாக பாலியல் பலாத்காரம் செய்த 4 பேர் கைது செய்யப்பட்டனர்.;
ராமநாதபுரம்,
சென்னை அண்ணா பல்கலைக்கழக கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. அந்த சம்பவத்தின் அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள் மேலும் ஒரு அதிர்ச்சி சம்பவம் ராமநாதபுரம் அருகே நிகழ்ந்துள்ளது.
ராமநாதபுரம் அருகே வசிக்கும் இளம்பெண் ஒருவர் புத்தாண்டை ஒட்டி தனது காதலனுடன் பல்வேறு இடங்களுக்கு சென்றுள்ளார். இந்த நிலையில் புத்தியேந்தல் என்ற பகுதியில் காதலர்கள் இருவரும் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த நான்கு பேர் கொண்ட கும்பல் இந்த நேரத்தில் இங்கு என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் என மிரட்டி உள்ளனர்.
4 பேரும் சேர்ந்து ஆட்டோ ஓட்டுநரான அந்த காதலனையும், பெண்ணையும் தாக்கினர். அதன்பின்பு காதலரை விரட்டிவிட்டு, அந்த பெண்ணை ஒதுக்குப்புறமான ஒரு இடத்துக்கு கடத்திச்சென்று, 4 பேரும் சேர்ந்து கூட்டாக பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதில் படுகாயம் அடைந்த அந்த பெண், நேற்று முன்தினம் இரவு ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்ந்தார். டாக்டர்களிடம் அவர், தன்னை 4 வாலிபர்கள் தாக்கி, கூட்டு பலாத்காரம் செய்ததாக தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ம்ருத்துவமனையில் இருந்து ராமநாதபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார், அரசு மருத்துவமனைக்கு விரைந்து சென்று அந்த பெண்ணிடம் தீவிர விசாரணை நடத்தினர். அவர் அளித்த தகவலின் அடிப்படையில் புத்தேந்தல் பகுதியை சேர்ந்த அந்த 4 வாலிபர்களையும் போலீசார் பிடித்து விசாரித்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சந்தீஷ், உதவி போலீஸ் சூப்பிரண்டு சிவராமன் ஆகியோரும் 4 வாலிபர்களிடம் விசாரணை நடத்தினர்.
மிரட்டுதல், தாக்கி காயப்படுத்துதல், கூட்டு பலாத்காரம் செய்தல் உள்பட 8 பிரிவுகளின்கீழ் ராமநாதபுரம் மகளிர் போலீசார், வழக்குபதிவு செய்தனர். இந்த வழக்கில் ராமநாதபுரம் புத்தேந்தல் பகுதியை சேர்ந்த புவனேஷ்குமார் (வயது 27), சரண்முருகன் (29), செல்வகுமார் (27), குட்டி என்ற முனீஸ் கண்ணன்(25) ஆகிய 4 பேரையும் கைது செய்தனர். அவர்களை பரமக்குடி கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அவர்களை 10-ந்தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டதை தொடர்ந்து ராமநாதபுரம் சிறையில் அடைக்கப்பட்டனர்.