சென்னையில் 2 நாட்கள் தீபாவளி சிறப்பு இயற்கை சந்தை

சென்னையில் 2 நாட்கள் தீபாவளி சிறப்பு இயற்கை சந்தை நடைபெற உள்ளது.

Update: 2024-10-17 11:56 GMT

சென்னை,

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் வழிகாட்டுதலில் செயல்படும் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், ஊரகம் மற்றும் நகர்ப்புற பகுதியில் உள்ள மகளிர் சுய உதவிக் குழுக்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை நகர பகுதியில் விற்பனை செய்ய ஏதுவாக பல்வேறு புதிய முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஒவ்வொரு மாதமும் முதல் மற்றும் மூன்றாம் சனி மற்றும் ஞாயிறு ஆகிய கிழமைகளில் சென்னை, நுங்கம்பாக்கம், அன்னை தெரசா மகளிர் வளாகத்தில் இயற்கை சந்தை நடத்தப்படுகிறது.

அதன் தொடர்ச்சியாக, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 19.10.2024 (சனிக்கிழமை) மற்றும் 20.10.2024 (ஞாயிற்றுக்கிழமை) தீபாவளி சிறப்பு இயற்கை சந்தை நடைபெற உள்ளது. இந்த இயற்கை சந்தையில் தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் செயல்படும் மகளிர் சுய உதவிக் குழுக்கள் உற்பத்தி செய்யும் புத்தம் புதிய ஆடைகள், காஞ்சிபுரம் பட்டு சேலைகள், சேலம் இளம்பிள்ளை சேலைகள், பட்டு வேட்டி, சட்டைகள், விருதுநகர் காட்டன் புடவைகள், அரியலூர் வாரியங்காவல் காட்டன் புடவைகள், கோயம்புத்தூர் நெகமம் சேலைகள், திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களில் தயாரிக்கப்படும் நைட்டிகள்,

ஈரோடு போர்வைகள் மற்றும் துண்டுகள், திருப்பூர் டி-சர்ட் போன்ற தீபாவளி பண்டிகைக்கு தேவையான அனைத்து ஆடை வகைகளும் மற்றும் இயற்கை சார்ந்த பொருட்களான பாரம்பரிய அரிசிகள், சிறுதானிய மற்றும் சிறுதானிய மதிப்பு கூட்டு பொருட்கள், காய்கறிகள் மற்றும் கீரைகள், பனை ஒலை பொருட்கள் போன்ற இயற்கையுடன் சார்ந்த பொருட்களும் விற்பனை செய்யப்படுகின்றன.

மேலும் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களால் தயார் செய்யப்படும் பல்சுவை உணவு பொருட்களும் இந்த இயற்கை சந்தையில் விற்பனை செய்யப்படுகின்றன. எனவே பொதுமக்கள் அனைவரும் இயற்கை சந்தைக்கு வருகை தந்து, மகளிர் சுய உதவிக் குழுக்களின் தரமான உற்பத்தி பொருட்களை வாங்கி மகிழ அன்புடன் அழைக்கின்றோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்