'புகாரை நிரூபிக்காவிட்டால் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் பொதுவாழ்வில் இருந்து விலகுவார்களா?' - தி.மு.க. எம்.எல்.ஏ. உதயசூரியன்

புகாரை நிரூபிக்காவிட்டால் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் பொதுவாழ்வில் இருந்து விலகுவார்களா? என தி.மு.க. எம்.எல்.ஏ. உதயசூரியன் கேள்வி எழுப்பியுள்ளார்.

Update: 2024-06-22 06:38 GMT

சென்னை,

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் சட்டமன்ற தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. உதயசூரியன் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் நடந்த விஷ சாராய உயிரிழப்புகள் மற்றும் அது தொடர்பான எதிர்கட்சியினர் குற்றச்சாட்டுகள் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்தபோது அவர் கூறியதாவது;-

"தி.மு.க. எம்.எல்.ஏ. வசந்தகார்த்திகேயன் மீதும், என் மீதும் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் அவரது மகன் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் அபாண்டமான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர். நான் மூன்று தலைமுறையாக அரசியல் பாரம்பரியம் கொண்ட குடும்பத்தைச் சேர்ந்தவன். 5 முறை எம்.எல்.ஏ.வாக இருந்திருக்கிறேன்.

அதே போல் வசந்தகார்த்திகேயனின் தாயார் ஊராட்சி ஒன்றிய தலைவராக இருந்தவர். வசந்தகார்த்திகேயனும், நானும் மாவட்ட செயலாளர்களாக இருக்கிறோம். ராமதாஸ் தற்போது சி.பி.ஐ. விசாரணை வேண்டும் என்று கேட்கிறார். மத்தியில் அவர் சுகாதாரத்துறை மந்திரியாக இருந்தபோது மருத்துவக்கல்லூரி ஊழல் வழக்கில் சி.பி.ஐ. விசாரணை வேண்டாம் என்று கோர்ட்டுக்கு சென்றார்.

கள்ளக்குறிச்சி விஷ சாராய விவகாரத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக நடவடிக்கை எடுத்து அமலாக்கத்துறை கூடுதல் டி.ஜி.பி.யை மாற்றியிருக்கிறார். மாவட்ட கலெக்டர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். மாவட்ட எஸ்.பி. சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். பத்துக்கும் மேற்பட்ட காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பா.ம.க.வின் கூட்டணியில் இருக்கும் பா.ஜ.க. ஆட்சி செய்யும் மாநிலங்களில் கள்ளச்சாராயத்தால் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்திருக்கிறார்கள். அங்கெல்லாம் எடுக்கப்படாத நடவடிக்கைகளை தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 24 மணி நேரத்தில் எடுத்திருக்கிறார்.

ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் எங்கள் மீது கூறியிருக்கும் பொய்யான குற்றச்சாட்டை நிரூபித்துவிட்டால் நாங்கள் பொதுவாழ்வில் இருந்து விலகத் தயார். ஆனால் புகாரை நிரூபிக்காவிட்டால் தந்தையும், மகனும் பொதுவாழ்வில் இருந்து விலகுவார்களா?"

இவ்வாறு உதயசூரியன் எம்.எல்.ஏ. தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்