சமூகநீதியில் திமுகவுக்கு மயக்கம் ஏன்? - டாக்டர் ராமதாஸ் கேள்வி

சமூகநீதிக்கு எதிரான ஆணையை பிறப்பிக்க கல்லூரிக் கல்வி இயக்குனருக்கு யார் அதிகாரம் கொடுத்தது? என்று டாக்டர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

Update: 2024-07-03 06:51 GMT

சென்னை,

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாட்டில் அனைத்து வகையான கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையின் போது இடஒதுக்கீடு எவ்வாறு கடைபிடிக்கப்பட வேண்டும் என்பதற்கு தெளிவான முறையில் விதிகள் வகுக்கப்பட்டிருக்கும் நிலையில், அவற்றில் பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு அநீதி இழைக்கும் வகையில் திருத்தம் செய்து கல்லூரிக் கல்வி இயக்குனர் ஆணை பிறப்பித்திருக்கிறார். திமுக ஆட்சியில் பிறப்பிக்கப்பட்டிருக்கும் சமூகநீதிக்கு எதிரான இந்த ஆணை கண்டிக்கத்தக்கதாகும்.

தமிழ்நாட்டில் உள்ள 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இரு கட்டங்களாக நடைபெற்ற கலந்தாய்வுகள் மூலம் 64% இடங்கள் நிரப்பப்பட்டிருக்கும் நிலையில், மீதமுள்ள 36% இடங்களை நிரப்புவதற்கான கலந்தாய்வுகள் அடுத்தடுத்த கட்டங்களில் நடைபெற உள்ளன. சில பாடப்பிரிவுகளில் சேர நினைக்கும் மாணவர்களுக்கு இடம் இல்லாத நிலையும், சில பாடப் பிரிவுகளில் சேர மாணவர்கள் இல்லாத நிலையும் நிலவும் சூழலில், குறைந்த எண்ணிக்கையில் இடங்கள் உள்ள பாடப்பிரிவுகளுக்கு மாணவர் சேர்க்கையில் கடும் போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இத்தகைய சூழலில் கல்லூரிக் கல்வி இயக்குனர் கார்மேகம் கடந்த 2-ம் தேதி பிறப்பித்திருக்கும் அரசாணை பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களிடையே பெரும் அதிர்ச்சியையும், கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பிற்படுத்தபட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு ஒதுக்கப்பட்ட இடங்கள் காலியாக இருந்து, அவற்றை நிரப்ப சம்பந்தப்பட்ட பிரிவுகளைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் இல்லாத நிலையில், அந்த இடங்களை பட்டியலின மற்றும் பழங்குடியின மாணவர்களைக் கொண்டு நிரப்பலாம். அதேநேரத்தில் பட்டியலின, பழங்குடியின, மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்கள் காலியாக இருந்தால், அந்த இடங்களை வேறு பிரிவினரைக் கொண்டு நிரப்பக் கூடாது என்பதுதான் அவர் பிறப்பித்திருக்கும் ஆணையாகும்.

கல்லூரிக் கல்வி இயக்குனர் பிறப்பித்திருக்கும் ஆணை சமூகநீதிக்கு மட்டுமின்றி, விதிமுறைகளுக்கும் எதிரானது ஆகும். அரசு கலைக் கல்லூரிகளில் உள்ள அனைத்து இடங்களும் நிரப்பப்பட வேண்டும்; அரசு கல்லூரிகளில் சேர விரும்பும் மாணவர்கள் அனைவருக்கும் வாய்ப்பு ஏற்படுத்தித் தர வேண்டும் என்பதுதான் அரசின் நோக்கம் ஆகும். அதற்காகத் தான் காலியாக உள்ள இடங்களை நிரப்பும் வகையில், விண்ணப்பம் செய்வதற்கான காலக்கெடு கடந்த மாதமே நிறைவடைந்து விட்ட நிலையில், இன்று முதல் 5-ம் தேதி வரை புதிதாக விண்ணப்பிக்கலாம் என்றும் தமிழக அரசு அறிவித்திருக்கிறது.

பட்டியலின, பழங்குடியின மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களை வேறு எந்தப் பிரிவினரையும் கொண்டு நிரப்பக்கூடாது என்பது மிகவும் பிற்படுத்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட வகுப்பு மாணவர்களுக்கு இழைக்கப்படும் துரோகமாகும். இதன் மூலம், அவர்கள் கல்லூரிகளில் சேரும் வாய்ப்பு தடுக்கப்படும். இது மிகப்பெரிய சமூக அநீதி. உயர்கல்வித்துறையைப் பொறுத்தவரை அதன் செயலாளர் பிறப்பிக்கும் ஆணை தான் இறுதியானது. அதை மீறி, இப்படி ஒரு சமூகநீதிக்கு எதிரான ஆணையை பிறப்பிக்கக் கல்லூரிக் கல்வி இயக்குனருக்கு யார் அதிகாரம் கொடுத்தது?. சமூகநீதிக்கு எதிராக செயல்படுவதையே புதிய வாடிக்கையாகக் கொண்டிருக்கும் திமுக அரசு, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு சமூக அநீதி இழைப்பதற்காகவே இப்படி ஓர் ஆணையை கல்லூரி கல்வி இயக்குனர் மூலம் பிறப்பிக்கச் செய்ததா? என்பது குறித்து தமிழக அரசு விளக்கமளிக்க வேண்டும்.

கல்லூரிக் கல்வி இயக்குனரின் வழிகாட்டுதல்படி, அடுத்தக்கட்ட மாணவர் சேர்க்கை வரும் 8-ம் தேதி முதல் தொடங்கவுள்ள நிலையில், அதற்கு முன்பாக கல்லூரிக் கல்வி இயக்குனரின் ஆணை ரத்து செய்யப்பட வேண்டும். உயர்கல்வித்துறை செயலாளரின் ஆணைப்படியே மாணவர் சேர்க்கை நடைபெறுவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும். சமூகநீதி சார்ந்த விவகாரங்களில் திமுக அரசு மயக்கம் கொள்ளாமல், தடுமாறாமல் செயல்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்