விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: நாளை மறுநாள் பிரசாரத்தை தொடங்குகிறார் சீமான்
விக்கிரவாண்டி தொகுதிக்கு அடுத்த மாதம் (ஜூலை) 10-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.
சென்னை,
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் அடுத்த மாதம் (ஜூலை) 10-ந்தேதி நடைபெற உள்ளது. இத்தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூலை 13-ந்தேதி எண்ணப்படுகின்றன. இந்த தேர்தலில் தி.மு.க., பா.ம.க., நாம் தமிழர் கட்சி என மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளது.
இத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 14-ந்தேதி தொடங்கி நேற்று முன்தினத்துடன் முடிவடைந்தது. இத்தேர்தலில் போட்டியிட தி.மு.க. வேட்பாளர் அன்னியூர் சிவா, பா.ம.க. வேட்பாளர் சி.அன்புமணி, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் டாக்டர் அபிநயா உள்பட 56 வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். இவர்களின் மனுக்கள் மீதான பரிசீலனை நாளை (திங்கட்கிழமை) நடைபெறுகிறது.
தி.மு.க. வேட்பாளர் அன்னியூர் சிவாவை ஆதரித்து அமைச்சர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் கூட்டணி கட்சி தலைவர்களும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். பா.ம.க. வேட்பாளரான சி.அன்புமணி முக்கிய பிரமுகர்களை சந்தித்து ஏற்கனவே ஆதரவு திரட்டியுள்ளார். அவரும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
இந்த நிலையில், நாம் தமிழர் கட்சி டாக்டர் அபிநயாவை ஆதரித்து கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான் நாளை மறுநாளில் இருந்து விக்கிரவாண்டி தொகுதியில் பிரசாரம் செய்ய உள்ளார். மாநில கட்சியாக அங்கீகாரம் பெற்ற பிறகு நாம் தமிழர் கட்சி சந்திக்கும் முதல் தேர்தல் என்பதால் அந்த கட்சி விக்கிரவாண்டி தொகுதியில் எவ்வளவு ஓட்டுகளை பெறும் என்பது மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனால் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது.