டெல்லி விமான நிலையத்துக்கு மின்னஞ்சல் மூலம் வெடி குண்டு மிரட்டல்: 13 வயது சிறுவன் கைது

டெல்லி விமான நிலையத்துக்கு, 13 வயது சிறுவன் மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2024-06-23 11:18 GMT

கோப்புப்படம் 

புதுடெல்லி,

டெல்லி விமான நிலையத்துக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த 13 வயது சிறுவனை போலீசார் கைது செய்தனர்.

முன்னதாக கடந்த திங்கள் கிழமை, துபாய் செல்லும் விமானத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக டெல்லி விமான நிலையத்துக்கு ஒரு மின்னஞ்சல் வந்தது. இதையடுத்து விமான நிலையத்தில் அவசரநிலை அறிவிக்கப்பட்டது. மேலும் உயர் எச்சரிக்கையுடன் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து அந்த வெடிகுண்டு மிரட்டல் போலியானது என்று கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த நிலையில் இது தொடர்பாக எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அப்போது வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக மின்னஞ்சல் அனுப்பிய உடனே அந்த மின்னஞ்சல் ஐடி நீக்கப்பட்டது (Delete) தெரியவந்தது. மேலும் அந்த மின்னஞ்சல் உத்தரகாண்ட் மாநிலம் பித்தோராகரில் இருந்து அனுப்பப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து அங்கு சென்ற போலீசார் மின்னஞ்சல்அனுப்பிய 13 வயது சிறுவனை கைது செய்தனர். அவனிடம் விசாரணை மேற்கொண்டபோது, சில நாட்களுக்கு முன்பு இளைஞர் ஒருவர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த செய்தியை பார்த்து அதுபோல தானும் விளையாட்டுக்காக அனுப்பியதாக தெரிவித்துள்ளான்.

படிப்பதற்காக தனது பெற்றோர் வாங்கி கொடுத்த செல்போன் மூலம் அந்த மின்னஞ்சலை அனுப்பியதாகவும் பின்னர் பயந்துபோய் அந்த ஐடியை நீக்கிவிட்டதாகவும் தெரிவித்துள்ளான். இதையடுத்து போலீசார் அந்த சிறுவனை அவனது பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்