முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் ஐக்கிய அரபு அமீரக மந்திரி சந்திப்பு

தமிழ்நாட்டில் புதிய தொழில் முதலீடுகள் மேற்கொள்வது தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

Update: 2024-07-25 08:36 GMT

சென்னை,

ஐக்கிய அரபு அமீரக பொருளாதாரத்துறை மந்திரி, அப்துல்லா பின் தவுக் அல் மர்ரி அரசு முறை பயணமாக சென்னை வந்துள்ளார். நேற்று சென்னையில் நடைபெற்ற சர்வதேச வர்த்தக கருத்தரங்கில் அவர் பங்கேற்றார்.

இந்த கருத்தரங்கில் தொழில்முனைவோர் துறையின் ராஜாங்க மந்திரி ஆலியா பிந்த் அப்துல்லா அல் மஸ்ரூயி மற்றும் அதிகாரிகள் உள்ளிட்ட ஐக்கிய அரபு அமீரக அரசுக்குழுவினர் கலந்து கொண்டனர். இதில் சிறப்பு விருந்தினராக தமிழக தொழில், முதலீடு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா கலந்து கொண்டு பேசினார்.

கூட்டத்தில் தளவாடங்கள், மேம்பட்ட தொழில்கள், தொழில்முனைவோர், சிறு, நடுத்தர தொழில்கள், சுற்றுச்சூழல் மற்றும் முதலீடு ஆகிய துறைகளில் புதிய கூட்டு முயற்சிகள் மற்றும் ஒத்துழைப்பு பெறுவது குறித்த வாய்ப்புகள் குறித்து ஆலோசனை செய்யப்பட்டது.

இந்த நிலையில், ஐக்கிய அரபு அமீரக பொருளாதாரத்துறை மந்திரி, அப்துல்லா பின் தவுக் அல் மர்ரி, இன்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்தார். அப்போது அமீரக மந்திரியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பொன்னாடை அணிவித்து வரவேற்றார். தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பில், தமிழ்நாட்டில் புதிய தொழில் முதலீடுகள் மேற்கொள்வது தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

 

Tags:    

மேலும் செய்திகள்