தமிழ்நாடு சட்டசபை கூட்டத்தின் இன்றைய நிகழ்வுகள் தொடங்கின
சட்டசபையில் மீதான மானியக் கோரிக்கைகள் விவாதம் நடக்கிறது.;
சென்னை,
தமிழக சட்டசபையின் இன்றைய நிகழ்வுகள் கேள்வி நேரத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. கேள்வி நேரம் முடிந்ததும் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை, தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை மீதான மானியக் கோரிக்கைகள் விவாதம் நடக்கிறது.
இதில் ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசுகிறார்கள். உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தகவல் தொழில் நுட்பவியல் துறை மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா ஆகியோர் பேசுகிறார்கள். இறுதியாக தங்கள் துறை சார்ந்த புதிய அறிவிப்புகளையும் அவர்கள் வெளியிடுகின்றனர்.
மாலை 5 மணிக்கு மீண்டும் கூடும் சட்டசபை கூட்டத்தில் காவல், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறைகள் மீதான மானியக் கோரிக்கைகள் விவாதம் நடக்கிறது. இந்த விவாதத்தில் பங்கேற்று ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசுவார்கள். அத்துடன் இன்றைய கூட்டம் முடிவடையும்.
நாளை (சனிக்கிழமை) காலை சட்டசபை மீண்டும் கூடியதும் காவல், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை மீதான மானியக் கோரிக்கைகள் விவாதத்துக்கு பதில் அளித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகிறார். இறுதியாக தனது துறை சார்ந்த புதிய அறிவிப்புகளையும் அவர் வெளியிடுகின்றார்.