காதலி சென்ற அரசு பஸ்சை நிறுத்த பெட்ரோல் குண்டு வீசிய காதலன்

பஸ்சில் இருந்த பயணிகள் பீதியில் அங்கிருந்து வெளியே தப்பி ஓடினர்.

Update: 2024-05-30 02:50 GMT

அரியலூர்,

அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே உள்ள நரசிங்க பாளையம் காலனி தெருவை சேர்ந்தவர் அருமைராஜ். இவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட துணை அமைப்பாளராக உள்ளார். இவரது மகன் பிரேம்குமார் (வயது 21). இவர், டிப்ளமோ மெக்கானிக் படித்துள்ளார்.

பிரேம்குமார் ஒரு பெண்ணை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் அந்த பெண், பிரேம்குமாரிடம் கடந்த சில நாட்களாக பேசாமல் இருந்து வந்துள்ளார்.

நேற்று காலை 7.30 மணியளவில் அந்த பெண் ஊருக்கு செல்வதற்காக நரசிங்கபாளையம் காலனி பஸ் நிறுத்தத்தில் பஸ்சுக்காக காத்திருந்தார். பின்னர் காட்டுமன்னார்குடியில் இருந்து ஜெயங்கொண்டம் நோக்கி சென்ற அரசு பஸ்சில் அந்த பெண் ஏறினார். பஸ் கிளம்பிய நிலையில் அங்கு வந்த பிரேம்குமார் தனது காதலி சென்ற அரசு பஸ்சை நிறுத்த பெட்ரோல் குண்டு வீசினார்.

இதனை கண்டு அதிர்ச்சியடைந்த டிரைவர் திடீரென பஸ்சை நிறுத்தினார். இதனால் அந்த பெட்ரோல் குண்டு சாலையில் விழுந்து தீப்பிடித்தது. இதையடுத்து பஸ்சில் இருந்த பயணிகள் பீதியில் அங்கிருந்து வெளியே தப்பி ஓடினர்.

இந்த சம்பவம் குறித்து பஸ் டிரைவர் ஆரோக்கியசாமி அளித்த புகாரின் பேரில் மீன்சுருட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் பெட்ரோல் குண்டு வீசிய பிரேம்குமாரை கைது செய்தனர். இந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்