போலீஸ் ஏட்டுவை ஓட, ஓட விரட்டி வெட்டிய வாலிபர்கள்: தென்காசியில் பரபரப்பு

அரிவாளால் வெட்டப்பட்ட போலீஸ் ஏட்டு தங்கதுரை தன்னை காப்பாற்றிக்கொள்வதற்காக டீக்கடைக்குள் நுழைந்து தப்பித்தார்.

Update: 2024-05-31 01:49 GMT

ஆலங்குளம்,

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் போலீஸ் நிலையத்தில் தங்கதுரை, ஜான்சன் ஆகியோர் ஏட்டாக பணியாற்றி வருகின்றனர். இவர்கள் நேற்று முன்தினம் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ஆலங்குளம் பஸ் நிலையம் முன் உள்ள ஒரு ஓட்டலில் டீக்குடித்துக் கொண்டு இருந்தனர்.

அப்போது, அங்கு ஒரு மோட்டார் சைக்கிளில் 2 வாலிபர்கள் வந்தனர். அவர்கள் திடீரென்று போலீஸ்காரர்களை நோக்கி ஓடினார்கள். இதனை சற்றும் கவனிக்காத தங்கதுரையை 2 பேரும் தாக்கினார்கள். உடனே சுதாரித்துக்கொண்ட தங்கதுரை ஒருவரை பிடித்து தள்ளிவிட்டு ஓட முயன்றார். மற்றொரு நபர் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் தங்கதுரையை ஓட, ஓட விரட்டி வெட்டினார். இதனை கண்ட ஜான்சன் அவர்களை தடுக்க முயன்றபோது அவரையும் அந்த நபர் வெட்ட விரட்டினார்.

இதனால் ஜான்சன் அங்கிருந்து தப்பி ஓடினார். இதனை கண்ட அங்கு நின்ற பொதுமக்கள் அலறினார்கள். இதற்கிடையே அரிவாளால் வெட்டப்பட்ட தங்கதுரை தன்னை காப்பாற்றிக்கொள்வதற்காக டீக்கடைக்குள் நுழைந்து தப்பித்தார். அதற்கு பின்னரும் அந்த 2 வாலிபர்களும் போலீஸ்காரரின் மோட்டார் சைக்கிளை அரிவாளால் வெட்டி சேதப்படுத்தி டீக்கடை முன் இருந்த நாற்காலிகள் உள்ளிட்ட பொருட்களையும் அடித்து நொறுக்கிவிட்டு அங்கிருந்து தங்களது மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றனர்.

சக போலீஸ்காரர் வெட்டப்பட்டதை அறிந்த ஆலங்குளம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். லேசான காயங்களுடன் உயிர் தப்பிய தங்கதுரையை மீட்டு சிகிச்சைக்காக அங்குள்ள ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். தொடர்ந்து தப்பி ஓடிய 2 பேர் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

அதில் பல்வேறு தகவல்கள் வெளியாகின.

அதாவது, கடந்த 2 நாட்களுக்கு முன் ஆலங்குளம் - நல்லூர் சாலையில் சப்-இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அந்த வழியாக ஒரே மோட்டார் சைக்கிளில் வந்த 4 வாலிபர்கள் போலீசாரை கண்டதும் மோட்டார் சைக்கிளில் திரும்பி செல்ல முயன்றனர். இதனை கவனித்த போலீசார் அவர்களை மடக்கி பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.

அதில் ஆலங்குளம் அருகே உள்ள சிவலார்குளத்தை சேர்ந்த முத்தையா மகன்கள் மகேஷ் (26), பெர்லின் (24), கஜேந்திரா (22) மற்றும் மரிய சுந்தரம் மகன் நவீன் ஆகியோர் என்பதும், அவர்களிடம் கஞ்சா பொட்டலம் இருப்பதும் தெரியவந்தது. உடனே 4 பேரையும் கைது செய்த போலீசார், 3 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

மேலும் இன்ஸ்பெக்டர் மாதவன் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார். அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் போலீசார், மகேசின் வீட்டிற்கு சென்று சோதனை செய்தனர். அங்கு கஞ்சா விற்றதில் கிடைத்த ரூ.2 லட்சத்தை பறிமுதல் செய்தனர்.

இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து 4 பேரையும், பறிமுதல் செய்யப்பட்ட 3 கிலோ கஞ்சா, ரூ.2 லட்சம் மற்றும் மோட்டார் சைக்கிள் ஆகியவற்றையும் ஆலங்குளம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின்னர் 4 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

தனது தம்பிகள் கைதானதை அறிந்த முத்தையாவின் மூத்த மகன் கல்யாணசுந்தரம் போலீஸ் நிலையத்திற்கு சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டார். கஞ்சா பொட்டலங்களை வைத்துக் கொண்டு பணத்தை திருப்பி தருமாறு கேட்டுள்ளார். பணத்தை நீதிமன்றத்தில் ஒப்படைத்து விட்டதால் திருப்பிதர முடியாது என்று தெரிவித்த போலீசார், கல்யாண சுந்தரத்தை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.

இந்த நிலையில் பணத்தை திருப்பி தராத போலீசார் மீது ஆத்திரத்தில் இருந்த கல்யாணசுந்தரம் நேற்று முன்தினம் இரவு ரோந்து பணியில் ஈடுபட்ட ஏட்டு தங்கதுரையை தனது நண்பரான தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே பன்னீரூத்தை சேர்ந்த நிர்மல்குமாருடன் சேர்ந்து வெட்டியது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய 2 பேரையும் வலைவீசி தேடி வந்தனர்.

இந்த நிலையில் ஆலங்குளம் அருகே உள்ள நாச்சியார்புரம் விலக்கு காற்றாலை பகுதியில் கல்யாண சுந்தரம் பதுங்கி இருப்பதாக போலீசுக்கு நேற்று தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அங்கு விரைந்து சென்றனர். போலீஸ் வருவதை அறிந்த கல்யாண சுந்தரம் அங்கிருந்து தப்பி ஓட முயன்றார். அப்போது, அவரது லுங்கி தடுக்கி கீழே விழுந்தார். இதில் அவருக்கு வலது கையில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் அவரை பிடித்து அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு, கையில் கட்டும் போடப்பட்டது. பின்னர் கல்யாண சுந்தரத்தை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த சம்பவம் ஆலங்குளத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்