ராஜஸ்தானில் மாணவனுக்கு கத்திக்குத்து; பள்ளிகளுக்கு கூர்மையான பொருட்களை கொண்டு செல்ல தடை

ராஜஸ்தானில் மாணவர்கள் பள்ளிகளுக்கு கூர்மையான பொருட்களை கொண்டு செல்ல தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

Update: 2024-08-17 14:41 GMT

ஜெய்ப்பூர்,

ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் உள்ள அரசு பள்ளியில் படித்து வரும் 15 வயது மாணவனை சக மாணவன் கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. பள்ளியில் உணவு இடைவேளையின்போது இரு மாணவர்களும் சண்டையிட்டுக் கொண்டதாகவும், அப்போது ஒரு மாணவன் மற்றொரு மாணவனின் தொடையில் கத்தியால் குத்தியதாகவும் கூறப்படுகிறது.

இதில் காயமடைந்த மாணவனை பள்ளி நிர்வாகத்தினர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். கத்தியால் குத்திய மாணவனையும், அவனது தந்தையையும் போலீசார் கைது செய்தனர். அதே சமயம், இந்த சம்பவத்தில் தொடர்புடைய இரண்டு மாணவர்களும் வெவ்வேறு சமூகங்களைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது.

இதன் காரணமாக, உதய்பூரில் இரு சமூகங்களுக்கிடையே மோதல் உருவானது. அவர்கள் ஒருவர் மீது ஒருவர் கல் வீசி தாக்குதலில் ஈடுபட்டனர். 10-க்கும் மேற்பட்ட கார்கள் தீ வைக்கப்பட்டன. வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தி நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இந்த நிலையில், ராஜஸ்தானில் மாணவர்கள் பள்ளிகளுக்கு கூர்மையான பொருட்களை கொண்டு செல்ல தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக ராஜஸ்தான் மாநில கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஆசிரியர்கள் தினமும் மாணவர்களின் புத்தகப் பைகளை சோதனை செய்ய வேண்டும் எனவும், யாராவது கூர்மையான பொருட்களை கொண்டு வந்திருப்பது கண்டறியப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்