சேலம் விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

சேலம் விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

Update: 2024-06-12 11:30 GMT

சென்னை,

சேலம் மாவட்டம், வலசையூர் அருகே சுக்கம்பட்டி கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி எதிரில் இன்று காலை சுமார் 10.40 மணியளவில் அரூரில் இருந்து சேலம் நோக்கி சென்ற லாரி ஒன்றின் பின்னால் இரண்டு இருசக்கர வாகனங்களில் சென்றுகொண்டிருந்தவர்கள் மீது, ஆச்சாங்குட்டப்பட்டியிலிருந்து சேலம் நோக்கி வந்துகொண்டிருந்த தனியார் பேருந்து எதிர்பாராதவிதமாத மோதிய விபத்தில் இருசக்கர வாகனங்களில் பயணம் செய்த கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நில அளவையராக பணிபுரிந்துவந்த முருகன் (வயது 30) மற்றும் அவரது மனைவி நந்தினி (25) மற்றும் பூவனூரைச் சேர்ந்த வேதவள்ளி (28) ஆகிய மூவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இந்த விபத்தில், முருகன் மற்றும் நந்தினி தம்பதியரின் ஒரு வயது குழந்தை கவின் பலத்த காயமடைந்து சிகிக்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தது என்ற துயரகரமான செய்தியினைக் கேட்டு மிகுந்த வருத்தமும் வேதனையும் அடைந்ததாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மேலும், இவ்விபத்தில் காயமடைந்து சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருபவர்களுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கவும் அறிவுறுத்தியுள்ளேன்.

இவ்விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சமும், பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா ரூ.1 லட்சமும், லேசான காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.5 ஆயிரமும் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து நிதியுதவி வழங்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்