காஞ்சிபுரம் மேயருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி

காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் மகாலட்சுமிக்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி அடைந்துள்ளது.

Update: 2024-07-29 01:52 GMT

காஞ்சீபுரம்,

காஞ்சீபுரம் மாநகராட்சியில் தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜனதா, காங்கிரஸ், பா.ம.க., த.மா.கா. கவுன்சிலர்கள், சுயேச்சை கவுன்சிலர்கள் என மொத்தம் 51 கவுன்சிலர்கள் உள்ளனர். தி.மு.க.வை சேர்ந்த மகாலட்சுமி யுவராஜ் மேயராகவும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த குமரகுருபரன் துணை மேயராகவும் பதவி வகித்து வருகின்றனர்.தி.மு.க. மேயர் பதவியேற்ற சில மாதங்களிலேயே அவருக்கு எதிராக கவுன்சிலர்கள் போர்கொடி தூக்கினர்.

கடந்த சில மாதங்களாக தி.மு.க. கவுன்சிலர்களும் மேயருக்கு எதிராக போர்கொடி தூக்கி வருகின்றனர். இதையடுத்து தி.மு.க. மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்.எல்.ஏ., நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என.நேரு ஆகியோர் தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதன் பின்னரும் தீர்வு எட்டப்படவில்லை. இந்த நிலையில் இன்று (திங்கட்கிழமை) நம்பிக்கையில்லா தீர்மானம், அது தொடர்பான விவாதம் மற்றும் வாக்கெடுப்பு நடத்தப்படும் என மாநகராட்சி கமிஷனர் அறிவித்து இருந்தார். 

 தி.மு.க. மேயர் மகாலட்சுமி யுவராஜ்க்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர மாநகராட்சி கூட்டம் நடைபெற இருந்த  நிலையில் மேயருக்கு எதிரான நிலையில் உள்ள 35 கவுன்சிலர்கள் மற்றும் மேயர் தரப்பு கவுன்சிலர்கள் 10 பேர் காஞ்சீபுரத்தில் இருந்து சுற்றுலா சென்றனர். 

தி.மு.க. மேயரை பதவி நீக்கம் செய்ய 5-ல் 4 பங்கு கவுன்சிலர்கள் மேயருக்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என்ற நிலையில் மொத்தம் உள்ள 51 கவுன்சிலர்களில் 41 பேர் மேயருக்கு எதிராக வாக்களித்தால் மட்டுமே மேயரை பதவி நீக்கம் செய்ய முடியும். ஆனால்,  இரு தரப்பு கவுன்சிலர்களும் சுற்றுலா சென்றதால்,  இன்று நடைபெறும் நம்பிக்கையில்லா தீர்மானம் மற்றும் அது தொடர்பான விவாத கூட்டத்தில் மாநகராட்சி கவுன்சிலர்கள் கூட்டத்தில் பங்கேற்பார்களா? என்ற கேள்வி எழுந்தது.இந்த நிலையில், நம்பிக்கை வாக்கெடுப்பில், கவுன்சிலர்களில் யாரும் பங்கேற்கவில்லை. இதனால், மேயருக்கு எதிரான தீர்மானம் தோல்வியில் முடிந்தது. இதன் மூலம், காஞ்சிபுரம் மாநகராட்சி மேயரின் பதவி தப்பியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்