இந்துத்துவா குறித்து அதிமுகவுடன் விவாதிக்க தயார் - அண்ணாமலை

அனைவரையும் அரவணைத்து செல்வதுதான் இந்துத்துவா என்று பாஜக தலைவர் அண்ணாமலை கூறினார்.

Update: 2024-05-27 12:19 GMT

சென்னை,

சென்னையில் பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி இரட்டை இலக்கத்தில் வெற்றிபெறும். தமிழகத்தில் பல்வேறு இடங்களில் முக்கிய தலைவர்கள் போட்டியிட்டு உள்ளனர். தமிழகத்தில் இருந்து பாஜக உறுப்பினர்கள் நாடாளுமன்றம் செல்வார்கள். மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணி 400 தொகுதிகளில் வெற்றி பெறும்.

2019 தேர்தலில் நடிகர் பிரகாஷ்ராஜ் போட்டியிட்டு டெபாசிட்டை இழந்தார். பிரகாஷ்ராஜ் நல்ல நடிகர்.. ஆனால் மோடியை திட்டுவதை மட்டுமே பிரகாஷ்ராஜ் முழுநேர வேலையாக வைத்திருக்கிறார். பாஜகவை பற்றி பேசுவதற்கு, அரசியல் அனுபவம் இல்லாதவர்தான் நடிகர் பிரகாஷ் ராஜ்.

பிரதமர் மோடி பேசுவதை எதிர்க்கட்சியினர் திரித்து பேசி வருகின்றனர். திமுக கூட்டணியில் உள்ள திருமாவளவன் கருத்துரிமையை பற்றி பேசுவது வேடிக்கையாக உள்ளது. விமர்சனம் செய்வது தவறில்லை; வார்த்தையில் கவனம் தேவை. விசிக தலைவர் திருமாவளவன் பொறுப்புணர்வோடு பேச வேண்டும்.

எல்லா இஸ்லாமியர்களும் ஓபிசி என்பதை தான் எதிர்க்கிறோம். மத அடிப்படையிலான இடஒதுக்கீட்டை பாஜக எதிர்க்கிறது. மாட்டுக்கறி சாப்பிடுவது அவரவர் தனிப்பட்ட விருப்பம். நான் மாட்டை சாமியாக பார்க்கிறவன். நீங்கள் மாட்டிறைச்சி சாப்பிடுங்கள்; அதை என்னை சமைத்து கொடுக்க சொல்வது என்ன நியாயம்.

ஜெயலலிதா ஒரு இந்துத்துவாவாதி, இந்துத்துவா என்பது மதம் அல்ல வாழ்வியல் முறை. அனைவரையும் அரவணைத்து செல்வதுதான் இந்துத்துவா. என் இந்துத்துவா அனைவரையும் அரவணைத்து செல்வதுதான். கரசேவை தவறான இயக்கம் அல்ல என பேசியவர் ஜெயலலிதா. ராமர் கோவில் கட்ட வேண்டும் என கையெழுத்து இயக்கம் நடத்தியவர் ஜெயலலிதா. தமிழகத்தில் வேதபாடசாலையை ஜெயலலிதா உருவாக்கினார்.

ஜெயலலிதா இருந்திருந்தால், முதல் ஆளாக ராமர் கோவிலுக்கு சென்றிருப்பார். மீண்டும் சொல்கிறேன் ஜெயலலிதா ஒரு தீவிரமான இந்துத்துவாவாதி. ஜெயலலிதா இந்துத்துவாவாதி என்பது குறித்து விவாதிக்க நான் தயார்; யார் வேண்டுமானாலும் விவாதிக்க வரலாம். ஜெயலலிதாவை இந்துத்துவாவாதி என கூறுவது என்ன தவறு. ஒரு விவாதம், விவாதமாக இருக்க வேண்டும். இந்துத்துவா குறித்து அதிமுகவுடன் விவாதிக்க தயார்.  இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்