யுபிஎஸ்சி தலைவர் ராஜினாமா குறித்து பிரதமர் மோடி விளக்க வேண்டும்- செல்வப்பெருந்தகை
யு.பி.எஸ்.சி தலைவர் குஜராத்தை சேர்ந்த மனோஜ் சோனி ராஜினாமா செய்திருப்பது மிகுந்த அதிர்ச்சி அளிப்பதாக செல்வபெருந்தகை தெரிவித்துள்ளார்.;
சென்னை,
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
சுப்ரீம் கோர்ட்டு ஆணையின்படி நாடு முழுவதும் நடந்த நீட் முடிவுகள் வெளியானதில் பல்வேறு குளறுபடிகள் அம்பலமாகியுள்ளன. நாடு முழுவதும் நடந்த தேர்வில் 23 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் தேர்வு எழுதி அவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜூன் 4-ந் தேதி நீட் முடிவு வெளியான அறிவிப்பில் 1 லட்சத்து 52 ஆயிரத்து 920 பேர் தமிழ்நாட்டில் தேர்வு எழுதியதாக தெரிவிக்கப்பட்ட நிலையில், நகரங்கள், மையங்கள் வாரியாக வெளியான மதிப்பெண் பட்டியலில் 744 பேர் கூடுதலாக எழுதியிருப்பதாக இருந்த தகவல் குழப்பத்தை ஏற்படுத்தியிருப்பதாக கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர். அதுமட்டுமல்லாமல் பல்வேறு மையங்களில் வெளியான முடிவுகள் ஏற்கனவே வெளியான முடிவுகளோடு ஒத்துப்போகாத வகையில் இருப்பது குறித்து சுப்ரீம் கோர்ட்டில் திங்கட்கிழமை நடைபெற உள்ள விசாரணையில் கோர்ட்டு என்ன முடிவு எடுக்கப்போகிறது என்று தெரியவில்லை.
இந்நிலையில், பிரதமர் மோடிக்கு நெருக்கமான மத்திய பணியாளர் தேர்வாணையத்தின்(யு.பி.எஸ்.சி.) தலைவர் குஜராத்தை சேர்ந்த மனோஜ் சோனி ராஜினாமா செய்திருப்பது மிகுந்த அதிர்ச்சியை தருகிறது. இன்னும் 5 ஆண்டுகள் பதவி காலம் உள்ள நிலையில் விலகியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது. யு.பி.எஸ்.சி.யில் நடந்திருக்கும் பல ஊழல்கள் தேசிய அளவில் கவனம் பெற்றுள்ளது. ஏராளமான ஊழல்களுக்கும், ராஜினாமாவிற்கும் ஏதாவது தொடர்புள்ளதா என்பது குறித்து பிரதமர் மோடி விளக்க வேண்டும்" இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.