இலங்கைத் தமிழ் மாணவர்களுக்காக தமிழக அரசு நடத்திய 'கலங்கரை' தொழில் வழிகாட்டுதல் பயிற்சி

இலங்கைத் தமிழ் மாணவர்களுக்காக தமிழக அரசு சார்பில் 'கலங்கரை' தொழில் வழிகாட்டுதல் பயிற்சி நடத்தப்பட்டது.

Update: 2024-05-30 14:00 GMT

சென்னை,

அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை ஆணையரகம் சார்பில் இலங்கைத் தமிழ் பள்ளி மாணவர்களுக்கான 'கலங்கரை' தொழில் வழிகாட்டுதல் பயிற்சி நேற்று நடத்தப்பட்டது. இது தொடர்பாக அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை ஆணையர் பா.கிருஷ்ணமூர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;-

"தமிழ்நாடு முழுவதும் 29 மாவட்டங்களில் உள்ள 103 இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் சுமார் 57,772 இலங்கைத் தமிழர்கள் வசிக்கின்றனர். அவர்களில் 2023-24ம் கல்வியாண்டில் 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு தேர்ச்சி அடைந்த 2,256 மாணவ, மாணவியர்களுக்கு தொழில் வழிகாட்டுதல் பயிற்சி 29 மாவட்டங்களில் உள்ள அரசு மாதிரி பள்ளிகளில் 29.05.2024(நேற்று) நடைபெற்றது. இத்திட்டத்தை அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை மற்றும் தமிழ்நாடு மாதிரி பள்ளிகள் துறையும் ஒருங்கிணைந்து நடத்தின.

சென்னை நுங்கம்பாக்கத்தில் பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகத்தில் (DPI CAMPUS), நடைபெற்ற இதன் தொடக்க நிகழ்வில் பொது மற்றும் மறுவாழ்வுத்துறை அரசு செயலாளர் க.நந்தகுமார் ஐ.ஏ.எஸ்., 29.05.2024 அன்று தொடங்கி வைத்து, (ZOOM) காணொளி மூலம் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள மாணவ, மாணவியருக்கு இந்நிகழ்ச்சியின் முக்கியத்துவத்தையும் இதனால் ஏற்படவுள்ள நன்மைகளைப் பற்றியும் கீழக்கண்டவாறு எடுத்துரைத்தார்.

கல்வி பயில்வதன் மூலம் மட்டுமே நமது வாழ்க்கை தரத்தை மேம்படுத்த முடியும். எனவே தாயகம் திரும்பிய தமிழர்களான முகாம் மாணவர்கள் நன்கு படித்து நல்ல பணியில் அமர்ந்து தங்களது வாழ்க்கைத் தரத்தை முன்னேற்ற வேண்டும். முகாம் வாழ் மாணவர்கள் அனைவருக்கும் உயர் கல்வி பயில்வதற்கு தேவையான செலவுகள் அனைத்தையும் அரசாங்கம் ஏற்றுக்கொள்ளும். மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்தி நன்கு படிக்க வேண்டும்.

அயலகத்தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை ஆணையர் பா.கிருஷ்ணமூர்த்தி, இலங்கைத் தமிழர்களுக்கு கல்வி உதவி மற்றும் வேலை வாய்ப்புகளை வழங்குவதில் அரசாங்கத்தின் அர்ப்பணிப்புக்கு இந்த தொழில் வழிகாட்டல் திட்டம் ஒரு முக்கிய சான்றாகும் என்று கூறினார்.

ஒவ்வொரு வருடமும் கல்வி வழிகாட்டுப் பயிற்சி மற்றும் திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் நடத்துவதற்கு ஏதுவாக அனைத்து முகாம்களிலும் சமுதாயக் கூடம் கட்டுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் படித்த முகாம் வாழ் இலங்கைத் தமிழ் மாணவர்களுக்கு தமிழ்நாடு திறன் மேம்பாட்டுப் பயிற்சி நிறுவனத்தின் மூலம் திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளித்து தகுந்த வேலை வாய்ப்பு உருவாக்கித் தருவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

எனவே மாணவ, மாணவியர் தங்களுக்கு ஏற்படும் தடைகளை முன்னேறுவதற்கு பயன்படும் படிக்கற்களாக மாற்றி வாழ்க்கையில் முன்னேற கல்வி மிகவும் அவசியம் என்பதால் இடை நிறுத்தம் இன்றி தொடர்ந்து கல்வி பயில வேண்டும். முகாம் வாழ் தமிழர் அனைவரும் தமிழ் சமுதாயத்துடன் ஒருங்கிணைவதில் உள்ள இடைவெளியை கல்வியின் மூலமே சரி செய்ய முடியும் என்றும் கூறினார்.

இந்த நிகழ்ச்சியின் அங்கமாக தமிழ்நாடு மாதிரி பள்ளிகள் துறையில் உள்ள மாவட்ட வழிகாட்டு அலுவலர்கள், பல்வேறு கல்வியாளர்கள் மற்றும் பல்துறை சேர்ந்த அறிஞர்கள் எதிர்கால வழிகாட்டுதல் தொடர்பாக சிறப்புரையாற்றினர். இந்நிகழ்வில் புழல் முகாமை சேர்ந்த மாணவ, மாணவியர்கள் மற்றும் தன்னார்வ தொண்டு அலுவலர்கள் என 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சி காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடைபெற்றது. தமிழகம் முழுவதும் 103 முகாம்களை சார்ந்த 2,256 மாணவ, மாணவியர்கள் அந்தந்த மாவட்டங்களில் உள்ள மாவட்ட மாதிரி பள்ளிகளில் இந்தப் பயிற்சிப் பட்டறையில் பங்கேற்று பயனடைந்தனர்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்