தமிழகத்தில் பாலியல் வன்கொடுமைகள் அதிகரிப்பு: அ.தி.மு.க. மகளிர் அணி ஆர்ப்பாட்டம்
மக்கள் நலம் என்று சொல்லியே தன் மக்கள் நலனை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு செயல்படுகிறது தி.மு.க.அரசு என்று பா.வளர்மதி கூறினார்.
சென்னை,
தமிழகத்தில் தொடர்ந்து பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்து வருகிறது. கொலை மற்றும் கொள்ளை செயல்களில் ஈடுபடுபவர்கள் சுதந்திரமாக நடமாடுகிறார்கள். இதை தடுக்க தவறிய திமுக அரசை கண்டித்து அதிமுக மகளிர் அணி சார்பில் சென்னையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
அதன்படி அதிமுக மகளிர் அணி சார்பில் இன்று வள்ளுவர் கோட்டம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மாநில மகளிர் அணி செயலாளரும் முன்னாள் அமைச்சருமான பா.வளர்மதி தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் சென்னை மற்றும் புறநகர் மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான பெண்கள் கலந்து கொண்டார்கள். ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்த பா.வளர்மதி பேசியதாவது,
மக்கள் நலம், மக்கள் நலம் என்று சொல்லியே தன் மக்கள் நலனை மட்டுமே குறிக்கோளாக கொண்டு செயல்படுகிறது. திமுக அரசு. விண்ணை முட்டும் விலைவாசி உயர்வு. கூடவே நினைத்தாலே ஷாக் அடிக்கும் மின்சார கட்டண உயர்வு என்று மக்கள் வதைக்கப்படுகிறார்கள்.
இப்போது மக்கள் குறிப்பாக பெண்கள் வெளியே நடமாட முடியாத நிலையும் உள்ளது. பெண்களுக்கு எங்கும் பாதுகாப்பு இல்லை. சின்ன குழந்தைகள் முதல் முதிய பெண்கள் வரை பாலியல் கொடுமைகளுக்கு ஆளாகிறார்கள். இந்த நெருக்கடிக்குள் இருந்து தமிழகத்தை மீட்க புரட்சி தமிழர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மீண்டும் அம்மாவின் ஆட்சியை கொண்டு வர உழைப்போம்.
இவ்வாறு அவர் பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற அனைவரும் கருப்பு உடை அணிந்து தி.மு.க அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் அமைப்பு செயலாளர் கோகுல இந்திரா, நடிகைகள் விந்தியா, காயத்ரி ரகுராம், மகளிர் அணி துணை செயலாளர் கிருஷ்ணா ராதாகிருஷ்ணா, நிர்மலா பெரியசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.