மிக மிக மகிழ்ச்சியாக உங்கள் முன் நிற்கிறேன்: முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் பேச்சு

அரசுக்கு எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை. ஒரு மாணவர் கூட பள்ளிக்கு பசியோடு செல்லக் கூடாது என்று முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் கூறினார்.

Update: 2024-07-15 04:22 GMT

திருவள்ளூர்,

முதல் அமைச்சரின் காலை உணவு திட்டம் அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார். பின்னர் இந்த நிகழ்ச்சியில் பேசியதாவது:-

முதலமைச்சரின் காலை உணவு திட்டம், நான் முதல்வன் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் மூலம்  தமிழ்நாட்டில் இருக்கும் பெண்கள், மாணவர்கள், உள்ளிட்டோரின் முன்னேற்றத்திற்காக, எதிர்காலத்திற்காக முதலமைச்சராக இருந்து பணியாற்றும் வாய்ப்பு எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மிக மிக மகிழ்ச்சியாக உங்கள் முன் நிற்கிறேன். காலை உணவு திட்டம் மூலம் பெற்றோரின் பொருளாதார சுமையை அரசு குறைத்துள்ளது.மக்கள் நலத்திட்டங்களை பார்த்து பார்த்து அரசு செயல்படுத்தி வருகிறது.பள்ளிக்கு வரும் மாணவர்களின் பசியை போக்கும் திட்டம்தான் காலை உணவுத்திட்டம். அரசுக்கு நிதி நெருக்கடி இருந்த போதிலும் காலை உணவுத் திட்டத்தை கொண்டு வந்தோம்.இத்திட்டத்தின் மூலம் 20.73 லட்சத்திற்கும் அதிகமான குழந்தைகள் சத்தான உணவை சாப்பிடுகிறார்கள்.

அரசுக்கு எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை. ஒரு மாணவர் கூட பள்ளிக்கு பசியோடு செல்லக் கூடாது. சங்க இலக்கியத்தில் பசிப் பிணி போக்குவது குறித்து பல்வேறு பாடல்கள் இடம் பெற்றுள்ளன. குழந்தைகள்தான் எதிர்காலத்தின் சொத்து என்பதால் காலை உணவு திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.. மாணவர்களின் படிப்புக்கு எந்த தடையும் ஏற்படக் கூடாது என்பதே எனது எண்ணம். காலை உணவு திட்டம் மாணவ, மாணவிகளுக்கு தன்னம்பிக்கை அளிக்கிறது. பள்ளிகளுக்கு வரக்கூடிய மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரித்துள்ளது.அமைச்சர்கள், அதிகாரிகள், எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள் உள்ளிட்டோரை கேட்டுக் கொள்ள விரும்புவது எந்த பள்ளியிலும் வழங்கப்படும் உணவின் விகிதம், தரம் குறைய கூடாது. பெற்றோர் இருவரும் வேலைக்கு செல்லும் குழந்தைகளுக்கு காலை உணவுத்திட்டம் வரப்பிரசாதம்.

எமர்ஜென்சி பற்றி நாடாளுமன்றத்தில் இப்போது கேள்வி எழுப்பும் பாஜக அரசு, அந்த நேரத்தில் பொதுப்பட்டியலுக்கு மாற்றப்பட்ட கல்வித்துறையை மாநிலப் பட்டியலுக்கு மாற்ற தயாராக இருக்கிறதா?"பசியோ, நீட் தேர்வோ புதிய கல்விக் கொள்கையோ அது எந்த தடையாக இருந்தாலும் தகர்ப்போம்.நீட் தேர்வை பல தலைவர்கள், மாணவர் அமைப்புகள் தற்போது எதிர்த்து வருகிறார்கள். தமிழகம் நீட் தேர்வை எதிர்த்த போது கேள்வி எழுப்பியவர்கள் கூட தற்போது நீட் தேர்வை எதிர்க்கிறார்கள்" இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

மேலும் செய்திகள்