மசோதாக்களை காரணமின்றி கவர்னர் நிறுத்தி வைக்கிறார் - சபாநாயகர் அப்பாவு

மசோதாக்கள் முடங்குவதால் மக்களின் விருப்பத்தை நிறைவேற்ற முடியவில்லை என சபாநாயகர் அப்பாவு கூறியுள்ளார்.

Update: 2024-09-23 10:29 GMT

புதுடெல்லி,

டெல்லி காமன்வெல்த் நாடாளுமன்ற கூட்டமைப்பின் இந்திய பிராந்திய கூட்டத்தில் தமிழக சட்டசபை சபாநாயகர் அப்பாவு கலந்து கொண்டு பேசியதாவது:-

மார்ச் 6, 1922ம் ஆண்டு சென்னை மாகாண ஆளுநர் வெலிங்டன் பிரபு மற்றும் அவரது மனைவி லேடி வில்லிங்டன் ஆகியோரால் மெட்ராஸ் லெஜிஸ்லேட்டிவ் கவுன்சில் தலைவருக்கு பரிசாக ஒரு நாற்காலி வழங்கப்பட்டது.

அந்த நாற்காலி ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக பழமையானது என்றாலும், அது அதன் பொலிவை இழக்காமல், துடிப்பான ஜனநாயகத்தின் அடையாளமாக தற்போதும் திகழ்கிறது. இந்த வரலாற்று சிறப்புமிக்க நாற்காலியில் அமர்ந்து சபையை நடத்தும் மிகப்பெரிய வாய்ப்பு எனக்குக் கிடைத்துள்ளது. இது என்னைப் போன்ற சாமானியனுக்கு ஜனநாயகத்தின் மாபெரும் பரிசாகும்.

பேரவையை அவமதிப்பது என்பது அந்த சட்டமன்ற உறுப்பினர்களை தேர்ந்தெடுத்த மக்களை அவமதிப்பதாகும். சட்டமன்ற உறுப்பினர்கள், மக்களின் விருப்பத்தை நிறைவேற்ற முடியாமல், அவர்களின் அதிருப்திக்கு ஆளாகின்றனர்.

அரசியலமைப்பால் வழங்கப்பட்ட உரிமைகள் மற்றும் சலுகைகளை பாதுகாக்கப்பட வேண்டும். ஆனால் சமீபகால நிகழ்வுகள் ஜனநாயகத்திற்கு பெரும் சவால்களை ஏற்படுத்தியுள்ளன. சட்டமன்றத்தில் ஒருமனதாக, நிறைவேற்றப்பட்ட சட்டமுன்வடிவுகள் பயன்பாட்டிற்கு கொண்டு வர முடியவில்லை. சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சில மசோதாக்கள், காரணமின்றி, பல ஆண்டுகளாக ஆளுநர் அலுவலகத்தில் முடங்கிக் கிடக்கின்றன.

ஒட்டுமொத்த எதிர்க்கட்சி உறுப்பினர்களும் வெளியேற்றப்பட்டாலும், நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஜனாதிபதி ஓரிரு மணி நேரத்தில் ஒப்புதலை வழங்குகிறார். ஆனால் சில மாநிலங்களில், சட்டமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு கூட மாநில ஆளுநர்கள் ஒப்புதல் அளிப்பதில்லை.

ஜனாதிபதியை பின்பற்றி மாநில ஆளுநர்களும் மசோதாக்களுக்கு விரைவில் ஒப்புதல் அளித்து, அரசியலமைப்பு விதிகளை நிலைநிறுத்தும் வகையிலான அமைப்புமுறையை உருவாக்கிட வேண்டும். எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் ஆளுநர்களின் தலையீட்டால் ஏற்படும் குழப்பங்களை தவிர்க்க முடியும்.

அரசியலமைப்புச் சட்ட விதிகளுக்குக் கட்டுப்பட்ட ஆளுநர், மசோதாக்களுக்கு தனது ஒப்புதலை வழங்குவதற்கு பதிலாக ஜனாதிபதிக்கு அனுப்பிவைத்தார். ஜனாதிபதியும் இந்த மசோதாக்கள் பலவற்றிற்கு எந்தக் காரணமும் கூறாமல் தனது ஒப்புதலை நிறுத்தி வைத்தார்.

மாநிலச் சட்டங்களின் திருத்த மசோதாக்களுக்கு ஆளுநரின் ஒப்புதல் மட்டுமே போதும், அவற்றை ஜனாதிபதிக்கு அனுப்பத் தேவையில்லை. இவ்வாறு மசோதாக்களை நிறுத்தி வைப்பதன் மூலம், தமிழ்நாட்டு மக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர், மேலும் நிறுத்தி வைப்பதற்கான காரணமும் கூறப்படாததால், சீரமைப்பு நடவடிக்கையும் எடுக்க முடியாத நிலை உள்ளது.

நீட் தேர்வு மசோதா ஆளுநர் அலுவலகத்துக்கும், ஜனாதிபதி அலுவலகத்துக்கும் இடையே இழுத்தடிக்கப்படுவதால் லட்சக்கணக்கான தமிழ்நாடு மாணவர்களின் எதிர்காலத்திற்கு பெரும் சவாலாக உள்ளது. தமிழக சட்டசபையில் ஆளுங்கட்சியை விட எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு அதிக வாய்ப்பு வழங்கப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்