சென்னையில் மீண்டும் கார் உற்பத்தியை தொடங்கும் போர்டு நிறுவனம்

சென்னையில் போர்டு தொழிற்சாலையை மீண்டும் இயக்க அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது.

Update: 2024-09-13 07:58 GMT

சென்னை,

தமிழ்நாட்டில் இளைஞர்களுக்கு அதிக எண்ணிக்கையிலான வேலைவாய்ப்புகளை உருவாக்கவும், தொழில் வளர்ச்சியை மேம்படுத்துவதற்காகவும், தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காகவும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்காவில் 17 நாட்கள் அரசுமுறை பயணம் மேற்கொண்டார்.

இப்பயணத்தின்போது சிகாகோவில் போர்டு மோட்டார் நிறுவனத்தின் உயர் அலுவலர்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்து, தமிழ்நாட்டில் கார் உற்பத்தியை மீண்டும் மேற்கொள்ள வேண்டும் என்றும், அவர்களது உலகளாவிய திறன் மையத்தை மேலும் விரிவுபடுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். போர்டு அதன் உலகளாவிய தொழில்நுட்பம் மற்றும் வணிக தீர்வு மையத்தை சென்னையில் கொண்டுள்ளது.

இந்த நிலையில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் கோரிக்கையை ஏற்று, சென்னையில் உள்ள தனது தொழிற்சாலையில் மீண்டும் கார் உற்பத்தியை தொடங்க போர்டு நிறுவனம் முடிவு செய்துள்ளது. தொழில் தொடங்குவதற்காக அனுமதி கோரி தமிழக அரசிடம் போர்டு நிறுவனம் கடிதம் அளித்துள்ளது.

கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் தமிழ்நாட்டை விட்டு வெளியேறிய போர்டு நிறுவனம் மீண்டும் தனது உற்பத்தியை தொடங்க இருப்பது மாநிலத்தின் வாகனத்துறை சீராக மீண்டும் ஒன்றிணைவதை உறுதி செய்வதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. ஏற்கனவே இருந்த 12,000 ஊழியர்களுடன் கூடுதலாக 3,000 ஊழியர்களை பணியில் அமர்த்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக போர்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்