ஓரினச்சேர்க்கை விவகாரம்; சூரஜ் ரேவண்ணாவின் போலீஸ் காவல் நீட்டிப்பு
ஓரினச்சேர்க்கை விவகாரத்தில் கைதான சூரஜ் ரேவண்ணாவின் போலீஸ் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. சூரஜ் ரேவண்ணா கைது;
பெங்களூரு,
ஹாசன் மாவட்டம் ஒலேநரசிப்புரா தொகுதி ஜனதாதளம்(எஸ்) கட்சி எம்.எல்.ஏ.வாக இருந்து வருபவர் எச்.டி.ரேவண்ணா. இவரது மனைவி பவானி ரேவண்ணா. இவரது மகன்கள் சூரஜ் ரேவண்ணா, பிரஜ்வல் ரேவண்ணா ஆவார்கள். இவர்களில் முன்னாள் எம்.பி.யான பிரஜ்வல் ரேவண்ணா, பெண்கள் பலாத்கார வழக்குகளில் போலீசாரால் கைது செய்யப்பட்டு பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
கர்நாடக மேல்-சபை உறுப்பினராக (எம்.எல்.சி) சூரஜ் ரேவண்ணா இருந்து வருகிறார். அவர் மீது ஜனதாதளம்(எஸ்) கட்சியை சேர்ந்த 29 வயது தொண்டரும், சூரஜ் ரேவண்ணாவின் நண்பரும் கொடுத்த புகாரின் பேரில் ஓரினச்சேர்க்கைக்கு அழைத்ததாக ஹாசன் மாவட்ட ஒலேநரசிப்புரா போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவானது. அந்த வழக்குகளில் சூரஜ் ரேவண்ணா கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்குகள் சி.ஐ.டி.போலீசாருக்கு மாற்றப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.
ஓரினச்சேர்க்கை வழக்கில் சூரஜ் ரேவண்ணாவை 8 நாட்கள் காவலில் எடுத்து போலீசார் விசாரணை நடத்தினார்கள். அவருக்கு ஆண்மை பரிசோதனை , மரபணு பரிசோதனை உள்பட 15 மாதிரியான மருத்துவ பரிசோதனைகள்நடத்தப்பட்டு இருந்தது. இந்த நிலையில், சூரஜ் ரேவண்ணாவின் போலீஸ்காவல் இன்றுடன் நிறைவு பெற்றதை தொடர்ந்து, பெங்களூரு மக்கள் பிரதிநிதிகள் சிறப்புகோர்ட்டில் அவர் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது சூரஜ் ரேவண்ணாவிடம் இன்னும் விசாரணை நடத்த வேண்டிய இருப்பதால், அவரை மேலும் 4 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி வழங்க வேண்டும் என்று போலீஸ் தரப்பில்நீதிபதியிடம் கேட்கப்பட்டது.
இதற்கு சூரஜ் ரேவண்ணா சார்பில் ஆஜரான வக்கீல் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். பின்னர் இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி சூரஜ் ரேவண்ணாவை வருகிற 3-ந் தேதி வரை மட்டும் காவலில் எடுத்து விசாரணை அனுமதி வழங்கி உத்தரவிட்டார். இதையடுத்து, கோர்ட்டில் இருந்து அவர் சி.ஐ.டி.போலீஸ் அலுவலகத்திற்கு அழைத்து செல்லப்பட்டார். சூரஜ் ரேவண்ணாவுக்கு நாளை (செவ்வாய்க்கிழமை) குரல் பரிசோதனை நடக்க உள்ளதாக கூறப்படுகிறது.