வைகோ உடல்நிலை குறித்து வெளியாகும் வதந்திகளை நம்ப வேண்டாம் - துரை வைகோ

வைகோ எப்போதும்போல வழக்கமான உணவை எடுத்துக் கொள்கிறார் என்று துரை வைகோ தெரிவித்துள்ளார்.

Update: 2024-05-28 06:47 GMT

சென்னை,

மதிமுக தலைமை கழக செயலாளர் துரை வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நேற்று முன்தினம் கால் தடுமாறி விழுந்ததில் இடது தோளில் எலும்பு முறிவு ஏற்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த தகவலை அறிந்த, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் என்னை தொலைபேசியில் அழைத்து வைகோ உடல்நிலை குறித்து விசாரித்தார்கள். நாளை வைகோவை அறுவை சிகிச்சைக்குத் தயார்படுத்த இருப்பதால் அறுவை சிகிச்சை முடிந்து மூன்று நாள் கழித்து வீடு திரும்பிய பிறகு வந்து சந்திப்பதாக முதல்-அமைச்சர் தெரிவித்தார்கள்.

தமிழ்நாட்டு அரசியல் கட்சித் தலைவர்கள், முக்கிய ஆளுமைகள் என்னை தொலைபேசியில் தொடர்புகொண்டு வைகோ அவர்களின் உடல்நலம் குறித்து கேட்டறிந்தார்கள். வைகோ மருத்துவ சிகிச்சைக்காக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நாளை அறுவை சிகிச்சை செய்ய இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்து உள்ளார்கள். சிறிய அறுவை சிகிச்சை தான். யாரும் பயப்பட வேண்டியது இல்லை. மருத்துவர்கள் அக்கறையுடன் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள்.

வைகோவின் உடல்நிலை குறித்து சில விஷமிகள் தவறான செய்திகளை பரப்பி ஆதாயம் தேட அற்பத்தனமாக முயற்சிக்கிறார்கள். வைகோவுக்கு எலும்பு முறிவால் ஏற்படும் வலியை மட்டும் தாங்கிக் கொண்டிருக்கிறார். எப்போதும் போல வழக்கமான உணவை எடுத்துக் கொள்கிறார். அவருக்கு மிகவும் பிடித்தமான டென்னிஸ் இப்பொழுது நடைபெறுகிற பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டிகளை ஆர்வத்துடன் தொலைக்காட்சியில் பார்க்கிறார்.

தொலைக்காட்சி செய்திகளை பார்த்து அவ்வப்போது தகவல்களை பரிமாறிக் கொள்கிறார்.

எனவே வைகோ பற்றி வெளிவரும் எந்த செய்தியையும் புறந்தள்ளுங்கள். கழகத் தோழர்கள் உள்ளிட்ட தலைவரின் மீது அன்பு கொண்ட பலர் ஆர்வ மிகுதியிலும், கவலையிலும் தலைவரை நேரில் சந்திக்க வருகிறோம் என, என்னிடம் தெரிவித்து வருகிறார்கள்.

நம்முடைய வருகையால் மருத்துவமனை நிர்வாகத்திற்கும், பிற நோயாளிகளுக்கும் எந்தவித இடையூறும் வந்துவிடக் கூடாது என்பதால், யாரும் தலைவரை சந்திக்க வர வேண்டாம் என அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். விரைவில் பூரண நலம் பெற்று தலைவர் வைகோ இல்லம் திரும்புவார். அதன்பிறகு கழகத் தோழர்கள் அவரை சந்திக்கலாம். அதுவரை, நேரில் வருவதை முற்றிலும் தவிர்ப்பது நல்லது.

வைகோ மீது அக்கறையும், அன்பும் கொண்டு நலம் விசாரித்த அரசியல் தலைவர்கள், முக்கிய ஆளுமைகள், தலைவர் வைகோவின் சுவாச காற்றாக விளங்கும் மறுமலர்ச்சி சொந்தங்கள் அனைவருக்கும் என் நன்றி. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்