தமிழக அரசு சார்பில் தொல்குடியினர் புத்தாய்வு திட்டம் அறிமுகம்

தொல்குடியினர் புத்தாய்வு திட்டத்தை தமிழக அரசு அறிமுகம் செய்துள்ளது.

Update: 2024-11-05 12:51 GMT

சென்னை,

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

பழங்குடியினர் தொடர்பான ஆராய்ச்சி மற்றும் ஆய்வு மேற்கொள்ளும் இளங்கலை, முதுகலை, முனைவர் பட்டம், முனைவர் பட்ட மேலாய்வு மாணக்கரை ஊக்கப்படுத்தும் வகையில் தமிழ்நாடு அரசு "தொல்குடியினர் புத்தாய்வு திட்டம்" என்ற புதிய திட்டத்தினை அறிமுகப்படுத்தியுள்ளது.

இத்திட்டத்தின் கீழ் தகுதி பெற மாணாக்கரின் குடும்ப ஆண்டு வருமான வரம்பு ரூ.8 லட்சத்துக்குள் இருத்தல் வேண்டும் மற்றும் மாணாக்கர் தமிழ்நாட்டில் உள்ள பழங்குடியினர் தொடர்பான ஆராய்ச்சி மற்றும் ஆய்வு மேற்கொள்ள வேண்டும். இத்திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்படும் இளங்கலை மற்றும் முதுகலை மாணாக்கருக்கு மாதம் ரூ.10,000/-மும் (6 மாதத்திற்கு) மற்றும் முனைவர் பட்டம், முனைவர் பட்ட மேலாய்வாளர்களுக்கு மாதம் ரூ.25,000/-மும் (3 வருடத்திற்கு) உதவித்தொகையாக வழங்கப்படும்.

இத்திட்டத்திற்கான நெறிமுறைகளை "https://www.tn.gov.in/forms/deptname/1" என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்துக்கொள்ளலாம். தற்போது தொல்குடியினர் புத்தாய்வு திட்டத்தினை 2024-2025ம் ஆண்டில் செயல்படுத்த இத்திட்டத்திற்கான விண்ணப்பம் 05.11.2024 -லிருந்து இணையவழியிலும் மற்றும் நேரடியாகவும் வரவேற்கப்படுகின்றன.

இணையவழியில் விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள்https://forms.gle/BDdkHTL6Ltkt5ToQ7 என்ற இணைப்பில் நேரடியாக 30.11.2024-க்குள் விண்ணப்பிக்குமாறும் மற்றும் நேரடியாகவும் விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் "https://www.tn.gov.in/forms/deptname/1" என்ற இணைப்பிலிருந்து விண்ணப்பப்படிவத்தினை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தினை இயக்குநர், பழங்குடியினர் நலன், சேப்பாக்கம், சென்னை-600005 என்ற முகவரிக்கு 30.11.2024 க்குள் அனுப்பி வைக்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

மேற்கண்ட விவரங்களை மாணாக்கர்களுக்கு தெரிவித்து அவர்களை இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க, அறிவுறுத்துமாறு தொடர்புடைய பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகள் கேட்டுக் கொள்ளப்படுகின்றன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்