'தி.மு.க வேட்பாளருக்கு எங்களின் வாழ்த்துகள்' - தருமபுரி பா.ம.க வேட்பாளர் சவுமியா அன்புமணி

தருமபுரியை என் சொந்த ஊராகதான் நினைக்கிறேன் என்று சவுமியா அன்புமணி கூறினார்.

Update: 2024-06-04 14:17 GMT

சென்னை,

தமிழ்நாட்டில் 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் ஒரு தொகுதி என 40 தொகுதிகளில் கடந்த ஏப்ரல் 19-ந் தேதி ஒரே கட்டமாக நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது. இதில் தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ.க. ஆகிய கட்சிகள் கூட்டணியிட்டும், நாம் தமிழர் கட்சி தனித்தும் களம் கண்டது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 39 தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணி முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில், தருமபுரி தொகுதியில் பாமக சார்பில் போட்டியிட்ட சவுமியா அன்புமணி தோல்வி அடைந்துள்ளார். இவரை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் ஆ.மணி 4,32,667 வாக்குகள் பெற்று 21,300 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார்.

ஆ.மணி (திமுக) - 4,32,667

சவுமியா அன்புமணி (பாமக) - 4,11,367

அசோகன் (அதிமுக) - 2,93,629

அபிநயா (நாதக) - 65,381

தேர்தலில் தோல்வியடைந்ததையடுத்து தருமபுரி பா.ம.க வேட்பாளர் சவுமியா அன்புமணி செய்தியாளர்களை சந்தித்தார். அபபோது அவர் பேசியதாவது,

'இந்த தேர்தல் எங்களுக்கு இன்னும் மக்களுக்கு செய்ய வேண்டும் என்பதை உணர்த்தியுள்ளது. தருமபுரி தொகுதியில் இன்னும் உழைக்க வேண்டியுள்ளது. வெற்றி கிடைத்திருந்தால் இன்னும் எவ்வளவோ பண்ண தாயாராக இருந்தேன். ஓட்டு போட்டவர்கள் போடாதவர்கள் என அனைவருக்குமான வளர்ச்சியை கொடுக்கவேண்டும் என்றுதான் தேர்தலில் போட்டியிட்டேன். இருந்தாலும் நமக்கு அந்த வெற்றி கிடைக்கவில்லை.

தருமபுரியை என் சொந்த ஊராகதான் நினைக்கிறேன். 4 லட்சம் மக்கள் சவுமியா எங்களுக்கு வேண்டும் என்று வாக்களித்திருக்கிறார்கள். இவர்களுக்காக நான் மீண்டும் வந்து நல்லது செய்வேன். வெற்றி கிடைத்திருந்தால் நிறைய விசயங்களை எளிதாக செய்திருக்கலாம். இப்ப எல்லாமே போராட்டம் பண்ணிதான் செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன். எனக்கு வாக்களித்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன்'. இவ்வாறு கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்