சீசிங் ராஜா என்கவுன்டர்: நடந்தது என்ன? - பரபரப்பு தகவல்கள்

ஆம்ஸ்ட்ராங் கொலைக்கும், சீசிங் ராஜாவுக்கும் தொடர்பு இல்லை என்று சென்னை தெற்கு மண்டல இணை ஆணையர் கூறியுள்ளார்.

Update: 2024-09-23 06:45 GMT

சென்னை,

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜுலை 5-ம் தேதி பெரம்பூரில் உள்ள அவரது வீட்டருகே கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இக்கொலை சென்னையை மட்டும் அல்லாமல் தமிழகத்தையே உலுக்கியது. இந்த விவகாரம் தொடர்பாக செம்பியம் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர்.

முதல் கட்டமாக, மறைந்த பிரபல ரவுடியான ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு (39 வயது), அவரது கூட்டாளிகள் திருவேங்கடம் (33 வயது) உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டனர். சகோதரர் ஆற்காடு சுரேஷ் கொலைக்கு பழிக்கு பழியாக ஆம்ஸ்ட்ராங்கை தீர்த்துக் கட்டியதாக பொன்னை பாலு வாக்குமூலத்தில் கூறியதாக போலீசார் தெரிவித்தனர். போலீசார் பிடியில் இருந்து தப்பியோடிய கொலையாளி திருவேங்கடம் என்கவுன்டரில் போலீசாரால் சுட்டு வீழ்த்தப்பட்டார்.

தொடர்ந்து இந்த கொலையின் பின்னணியில் இருந்ததாக மொத்தம் 27 பேர் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில் பிரபல ரவுடி ஆற்காடு சுரேஷின் நெருங்கிய நண்பராக அறியப்படும் ரவுடி சீசிங் ராஜாவை போலீசார் ஆந்திராவில் நேற்று கைது செய்தனர். அவரை சென்னை அழைத்து வந்த நிலையில், நீலாங்கரையில் வைத்து போலீசாரை தாக்கிவிட்டு அவர் தப்ப முயன்றதாக சொல்லப்படுகிறது.

அப்போது போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் ரவுடி சீசிங் ராஜா சுட்டுக்கொல்லப்பட்டார். ரவுடி சீசிங் ராஜா என்கவுன்டர் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சீசிங் ராஜா மீது 6 கொலை வழக்குகள் உட்பட 39-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. சரித்திர பதிவேடு குற்றவாளியான இவர் மீது ஆயுத தடைச் சட்டம், ஆட்களை கடத்தி தாக்குதல், கட்டப்பஞ்சாயத்து செய்து நிலங்களை வாங்குவது என பல வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன.

குறிப்பாக, 5 முறை குண்டர் தடுப்பு காவலிலும் சீசிங் ராஜா அடைக்கப்பட்டுள்ளார். சென்னை போலீஸ் கமிஷனராக அருண் பதவி ஏற்ற பிறகு நடைபெற்ற 3-வது என்கவுண்டர் இதுவாகும். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சீசிங் ராஜாவுக்கு தொடர்பு இருப்பதாக கூறப்பட்டு வந்த நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலைக்கும், சீசிங் ராஜாவுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று சென்னை தெற்கு மண்டல இணை ஆணையர் சிபி சக்கரவர்த்தி கூறியுள்ளார். இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது:-

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலைக்கும், சீசிங் ராஜாவுக்கும் எந்த தொடர்பும் இல்லை. வேளச்சேரி பார் ஊழியரை மிரட்டிய வழக்கு தொடர்பாக சீசிங் ராஜா தேடப்பட்டு வந்த நிலையில், அந்த வழக்கு தொடர்பாகவே ஆந்திர மாநிலம் கடப்பா பகுதியில் வைத்து அவரை நேற்று கைது செய்தோம். வேளச்சேரி காவல் ஆய்வாளர் விமல் தலைமையில் காவல்துறையினர் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.

அப்போது சீசிங் ராஜா மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் சுட்டார். அவர் சுட்டதில் காவல்துறை வாகனம் சேதமடைந்தது. இதையடுத்து தற்காப்புக்காக போலீசார் ரவுடி சீசிங் ராஜாவை சுட்டதில் அவர் உயிரிழந்தார். நாங்கள் விசாரிக்கவே கைது செய்தோம்; அவர் தாக்கியதால்தான் என்கவுன்டர் செய்யும் சூழல் உருவானது.

சீசிங் ராஜா மீது 6 கொலை வழக்கு உட்பட 39 வழக்குகள் நிலுவையில் உள்ளன. சீசிங் ராஜாவை ஏற்கெனவே தேடப்படும் குற்றவாளியாக நீதிமன்றம் அறிவித்துள்ளது. பத்துக்கும் அதிகமான வழக்குகளில் சீசிங் ராஜா மீது பிடி வாரண்ட் நிலுவையில் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார். என்கவுன்டர் செய்யப்பட்ட ரவுடி சீசிங் ராஜாவின் உடல் பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பாதுகாப்புக்காக அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

 

Tags:    

மேலும் செய்திகள்