முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் பயணித்த விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டதால் பரபரப்பு

தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் பயணித்த விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டதால் அதிகாரிகள் பதற்றமடைந்தனர்.

Update: 2024-08-28 03:13 GMT

சென்னை,

தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்க்கும் வகையில், முதலீட்டாளர்களை சந்திப்பதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று இரவு எமிரேட்ஸ் விமானம் மூலம் சென்னையில் இருந்து அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார். அமெரிக்காவில் மொத்தம் 17 நாட்கள் தங்கும் முதல்-அமைச்சர், பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். உயர்தர வேலை வாய்ப்பு மற்றும் உயர்தர முதலீடு ஆகியவையே இந்த பயணத்தின் நோக்கம் என தமிழக தொழில் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்காக இன்று சான்பிரான்சிஸ்கோ செல்லும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், செப்டம்பர் இரண்டாம் தேதி வரை அங்கு தங்கியிருப்பார். இன்று சான் பிரான்சிஸ்கோவில் நடைபெறும் முதலீட்டாளர்கள் மாநாட்டில் ஸ்டாலின் பங்கேற்கிறார். இந்த மாநாட்டின் போது, தொழில் தொடங்க தமிழ்நாட்டிற்கு வரும்படி முதலீட்டாளர்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுப்பதுடன், முக்கிய முதலீடுகளுக்கான ஒப்பந்தங்களும் கையெழுத்தாக உள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் பயணித்த விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டதால் அதிகாரிகள் பதற்றமடைந்தனர். முதல்-அமைச்சர் பயணித்த விமானம் புறப்பட்ட பிறகே வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சலை அதிகாரிகள் பார்த்ததாக கூறப்படுகிறது.

விமானம் புறப்பட்டு விட்டதால் துபாயில் இறங்கும் வரை 4 மணி நேரம் உச்சக்கட்ட பதற்றத்துடன் அதிகாரிகள் இருக்க நேர்ந்தது. இந்நிலையில் துபாயில் வழியாக அமெரிக்கா செல்லும் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் பயணித்த விமானம் பாதுகாப்பாக அங்கு தரையிறங்கியது.

விமானம் தரையிறங்கிய பிறகே வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது உறுதி செய்யப்பட்டதால் அதிகாரிகள் நிம்மதி அடைந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்