தமிழகத்தில் அசைக்க முடியாத சக்தி என்பதை வாக்குகள் மூலம் பா.ஜனதா நிரூபித்துள்ளது - எல்.முருகன்

நான் பாராளுமன்ற உறுப்பினராக தேர்வாகாவிட்டாலும் நீலகிரியை எனது தொகுதியாகவே நினைத்து தொடர்ந்து பணியாற்றுவேன் என்று எல்.முருகன் கூறியுள்ளார்.

Update: 2024-06-05 10:57 GMT

கோப்புப்படம் 

சென்னை,

மத்திய இணை மந்திரி எல்.முருகன் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்று, நமது பாசமிகு பாரத பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்தியில் 3-வது முறையாக ஆட்சியமைக்கும் மகிழ்ச்சியான தருணம் இது. பா.ஜ.க. கூட்டணிக்கு வாக்களித்த வாக்காளர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழகத்தில் ஆளும் அரசின் அதிகார பலம், பண பலம், அரசியல் சூழ்ச்சியை முறியடித்து பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான கூட்டணி வெற்றியை ஈட்டாவிட்டாலும் அசைக்க முடியாத சக்தி என்பதை வாக்குகள் மூலம் நிரூபித்துள்ளது. தமிழக மக்கள் பாரத பிரதமர் மோடி மீது கொண்டுள்ள பெரும் நம்பிக்கையை இது உறுதி செய்துள்ளது. தமிழக மக்களுக்கு எனது உளப்பூர்வமான நன்றியை உரித்தாக்குகிறேன்.

நீலகிரி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட எனக்கு பெரும் ஆதரவளித்த வாக்காளர்கள் அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். நீலகிரி தொகுதியில் களப் பணியாற்றிய கட்சியின் தொண்டர்கள், நிர்வாகிகள், என் மீது அன்பும் பாசமும் கொண்ட நல் உள்ளங்களுக்கு எனது நன்றி. நீலகிரி தொகுதியில் இருந்து நான் பாராளுமன்ற உறுப்பினராக தேர்வாகாவிட்டாலும் அதனை எனது தொகுதியாகவே நினைத்து தொடர்ந்து பணியாற்றுவேன் என உறுதிபட கூறுகிறேன்.

வளமான தமிழகத்திற்கும் வலிமையான பாரதத்திற்கும் தொடர்ந்து அர்ப்பணிப்புணர்வுடன் பணியாற்றுவோம். அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்