கருத்துக் கணிப்பையும் தாண்டி பா.ஜ.க. அதிக இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் - ஜி.கே.வாசன்

மூன்றாவது முறையாக பிரதமர் மோடி தலைமையில் பா.ஜ.க. ஆட்சி அமைக்கும் என்று ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.

Update: 2024-06-02 18:17 GMT

கோப்புப்படம் 

சிவகங்கை,

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி நிர்வாகியின் இல்ல விழாவில் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது:-

நாடாளுமன்ற தேர்தலில் கருத்துக்கணிப்பை தாண்டி, மக்கள் கணிப்பின் அடிப்படையில் பா.ஜ.க. அதிக இடங்களில் வெற்றி பெறும். 10 ஆண்டுகால பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசினுடைய மக்கள் பணிகள், சாதனைகள் அதற்கு எடுத்துக்காட்டாக இருக்கிறது. அதேபோல், தமிழகத்திலும் பா.ஜ.க. கூட்டணி சார்பில் அதிக எண்ணிக்கையிலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் பல தொகுதியில் வெற்றி பெறுவதற்கான நல்ல வாய்ப்பை மக்கள் ஏற்படுத்தி உள்ளனர். தமிழக தேர்தலில், பா.ஜ.க. கூட்டணியின் தேர்தல் பணிக்கு மக்கள் நல்ல அங்கீகாரம் வழங்குவார்கள் என்று நம்புகிறேன்.

மூன்றாவது முறையாக பிரதமர் மோடி தலைமையில் பா.ஜ.க. ஆட்சி அமைக்கும். நல்லரசாக செயல்படும் மத்திய அரசு, இந்தியாவை வல்லரசாக மாற்றும். அதில் மாற்றுக் கருத்து கிடையாது. அதில் அனைத்து கூட்டணி கட்சிகளுக்கும் பங்கு உண்டு. நாட்டின் உயர்வில் எங்களுக்கு பங்கு உண்டு. அனைத்து மாநிலத்தின் உயர்வையும் மாற்றாந்தாய் மனப்பான்மை இல்லாமல் மத்திய பா.ஜ.க. செயல்படுத்தும்.

பதவிகளுக்கு அப்பாற்பட்டு நாட்டின் நலன் கருதி, வளம் கருதி, பா.ஜ.க. கூட்டணியில் த.மா.கா. தொடர்ந்து நீடிக்கும். ஒரு கட்சியின் வெற்றி தோல்விகளை தீர்மானிக்கும் இடத்தில் மக்கள்தான் உள்ளனர். தமிழகத்தில் பா.ஜ.க., தி.மு.க., அ.தி.மு.க. என மூன்று கட்சிகள் உள்ளன. தேர்தலுக்கு தேர்தல் வாக்கு வங்கி, சதவீதம் என எல்லா கட்சிகளுக்கும் மாறும். தி.மு.க.வும் ஒரு காலத்தில் இரண்டு சட்டமன்ற உறுப்பினர்கள் கொண்ட கட்சியாக சட்டசபையில் இருந்தது. பா.ஜ.க.வும் கூட ஒரு காலத்தில் மிகக் குறைந்த எண்ணிக்கையில் தான் நாடாளுமன்றத்தில் இருந்தனர். தேர்தலில் வெற்றி, தோல்வி என்பது சகஜம்.

தமிழகத்தில் கடந்த மூன்று ஆண்டுகளாக மக்கள் விரோத ஆட்சிதான் நடந்து கொண்டிருக்கிறது. மக்கள் மீது சுமையை சுமத்தியுள்ளதை யாராலும் மறக்க முடியாது, மன்னிக்கவும் முடியாது. வருகிற 2026-ம் ஆண்டு தமிழக சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க. தலைமையில் அதிக கட்சிகளுடன் நல்ல கூட்டணி அமையும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்