ரவுடிகளை கட்டுப்படுத்துவதே எனது முதல் வேலை - போலீஸ் கமிஷனர் அருண்

சென்னை புதிய போலீஸ் கமிஷனராக அருண் ஐ.பி.எஸ். பொறுப்பேற்றுக்கொண்டார்.

Update: 2024-07-08 10:37 GMT

சென்னை,

பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட நிலையில் சென்னை போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோரை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. பணியிட மாற்றம் செய்யப்பட்ட சந்தீப் ராய் ரத்தோர் காவலர் பயிற்சி கல்லூரிக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.

இதையடுத்து சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி அருண் சென்னை மாநகர போலீஸ் கமிஷனராக நியமனம் செய்யப்பட்டார். இந்த நிலையில் சென்னை காவல்துறையின் புதிய போலீஸ் கமிஷனராக அருண் ஐ.பி.எஸ். பொறுப்பேற்றுக்கொண்டார். சந்தீப் ராய் ரத்தோர் தனது பொறுப்புகளை புதிய காவல் ஆணையர் அருணிடம் ஒப்படைத்தார். சென்னையின் 110-வது போலீஸ் கமிஷனராக ஏடிஜிபி அருண் பொறுப்பேற்றுக்கொண்டார்.

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் இதுவரை 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சட்டம் ஒழுங்கு ஏடிஜிபியாக டேவிட்சன் தேவாசிர்வாதம் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

அதன்பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் போலீஸ் கமிஷனர் அருண் கூறியதாவது:-

சென்னையில் ரவுடிகளை கட்டுப்படுத்துவதே எனது முதன்மையான பணி. சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டதாக எதை வைத்து சொல்கிறீர்கள். காலம், காலமாக குற்றங்கள் நடந்தே வருகின்றன; அதை தடுத்து கொண்டுதான் இருக்கிறோம். குற்றங்களை தடுப்பதற்கு முன்னுரிமை அளித்து வருகிறோம். சென்னையில் சட்டம் ஒழுங்கை நிலை நாட்ட உரிய நடவடிக்கை எடுக்கப்படும். ரவுடிகளுக்கு அவர்கள் மொழியில் பாடம் கற்பிக்கப்படும். சென்னை எனக்கு புதிதல்ல. புள்ளிவிவரங்களை வைத்து பார்க்கும்போது தமிழ்நாட்டில் கொலைகளின் எண்ணிக்கை குறைந்துள்ளன. சென்னை போக்குவரத்துகளில் உள்ள சிக்கல்களும் சரிசெய்யப்படும். பொறுப்பை உணர்ந்து காவல்துறையினர் செயல்பட்டால் குற்றங்கள் குறையும். ஆம்ஸ்ட்ராங் வழக்கு பற்றி கருத்து கூற முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்