'கேள்வி நேரம் முடிந்தவுடன் எந்த விஷயத்தையும் விவாதிக்கலாம்' - சபாநாயகர் அப்பாவு

சட்டப்பேரவையில் கேள்வி நேரம் முடிந்த பிறகு எதிர்கட்சிகள் எந்த விஷயத்தையும் விவாதிக்கலாம் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.

Update: 2024-06-22 04:49 GMT

சென்னை,

தமிழக சட்டப்பேரவையில் நேற்று மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது கள்ளக்குறிச்சி விஷ சாராய உயிரிழப்புக்கு கண்டனம் தெரிவித்து அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அமளியில் ஈடுபட்டதால் அவையில் இருந்து வெளியேற்றப்பட்டனர். பின்னர், முதல்-அமைச்சர் வேண்டுகோளின் பேரில் அ.தி.மு.க.வினரை சபாநாயகர் அவைக்குள் அனுமதித்தார். இருப்பினும் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் விவாதத்தில் பங்கேற்கவில்லை.

இந்த நிலையில் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரின் 2-வது நாளான இன்று கேள்வி நேரத்தின்போது அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் மீண்டும் அமளியில் ஈடுபட்டனர். அப்போது பேசிய சபாநாயகர் அப்பாவு, "சட்டமன்றத்திற்கு என்று விதியும், மரபும் உள்ளது. கேள்வி நேரம் என்பது மக்களுக்கானது. அது முடிந்த பிறகு எதிர்கட்சிகள் எந்த விஷயத்தையும் விவாதிக்கலாம். பிரதான எதிர்கட்சி தலைவர் பேசுவதற்கு தேவையான நேரத்தை தருகிறேன்" என்றார்.

இதையடுத்து சட்டப்பேரவையை புறக்கணித்து அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். இதன் பின்னர் பேசிய அப்பாவு, "சபை நடவடிக்கைகளுக்கு அ.தி.மு.க.வினர் இவ்வாறு இடையூறு விளைவிப்பது நியாயமான நடைமுறை அல்ல. கேள்வி நேரம் முடிந்த பிறகு நேரமில்லா நேரத்தில், கவன ஈர்ப்பு தீர்மானமாக எழுதி கொடுக்கவில்லை என்றாலும் அவர்களுக்கு பேசுகின்ற வாய்ப்பை வழங்கப் போகிறோம். ஆனால் அவர்களுக்கு என்ன நோக்கம் உள்ளது என்று தெரியவில்லை. சபையை புறக்கணிப்பது அவர்களுக்கு பெருமை சேர்க்காது. மக்களும் அதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்" என்று தெரிவித்தார். 

Tags:    

மேலும் செய்திகள்