இலங்கை கடற்படையால் பிடிக்கப்பட்ட 2 மீனவர்கள் ராமேஸ்வரம் திரும்பினர்
நடுக்கடலில் உயிரிழந்த மீனவரின் உடலுடன் இரு மீனவர்களும் ராமேஸ்வரம் திரும்பியுள்ளனர்.
ராமேஸ்வரம்,
இரு தினங்களுக்கு முன்பு ராமேஸ்வரம் மீனவர்கள் நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக்கொண்டிருந்தபோது அங்கு வந்த இலங்கை கடற்படையினர், படகை கொண்டு மோதியதில் மீனவர்கள் கடலில் விழுந்தனர். கடலில் விழுந்ததில் மீனவர் ஒருவர் உயிரிழந்தார். மேலும், இரு மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்துச் சென்றனர்.
இந்த சம்பவத்தை கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் தொடர் போராட்டம் நடத்தினர். மேலும், இந்த விவகாரம் தொடர்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், வெளியுறவு மந்திரி ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியிருந்தார். அதில், இலங்கை கடற்படையினரின் தொடர் அத்துமீறல் நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
இந்த நிலையில், இலங்கை கடற்படையால் பிடிக்கப்பட்ட 2 மீனவர்கள் இன்று அதிகாலை ராமேஸ்வரம் திரும்பியுள்ளனர். நடுக்கடலில் உயிரிழந்த மீனவரின் உடலுடன் இரு மீனவர்களையும் சர்வதேச எல்லை கடலில் இந்திய கடலோர காவல்படையிடம் இலங்கை கடற்படை ஒப்படைத்தது. தொடர்ந்து, ராமேஸ்வரம் திரும்பிய மீனவர்களிடம் காவல்துறை மற்றும் கடற்படையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.