வரதட்சணை கேட்டு சித்ரவதை.. குமரியில் 3 மாத கர்ப்பிணி தூக்கிட்டு தற்கொலை

கன்னியாகுமரியில் காதல் திருமணம் செய்த இளம்பெண் வரதட்சணை கொடுமையால் தற்கொலை செய்துகொண்டார்.

Update: 2024-06-21 02:52 GMT

கன்னியாகுமரி,

கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் அருகே உள்ள வழிக்கலாம்பாடு செம்பருத்திவிளையை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது53), தொழிலாளி. இவருடைய 2-வது மகள் அர்ச்சனா (23), பி.ஏ. பட்டதாரி. இவரும் காட்டாத்துறை சந்திரன்விளையை சேர்ந்த அபிஷ்மோன் (27) என்பவரும் கடந்த 2022-ம் ஆண்டு அக்டோபர் மாதம் காதல் திருமணம் செய்து கொண்டனர்.

திருமணத்திற்கு பின்பு அர்ச்சனா கணவர் வீட்டில் வசித்து வந்தார். ஆரம்பத்தில் இவர்களின் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக சென்றது. நாட்கள் செல்ல செல்ல அபிஷ்மோன் வரதட்சணை கேட்டு அர்ச்சனாவை அடித்து துன்புறுத்தி உள்ளார். இதற்கு அபிஷ்மோனின் தந்தை, தாயார், சகோதரி ஆகியோரும் உடந்தையாக இருந்துள்ளனர்.

தற்போது 3 மாத கர்ப்பிணியாக இருந்த அர்ச்சனா கடந்த ஞாயிற்றுக்கிழமை தனது தாய் வீட்டுக்கு வந்து, "காதலனை நம்பி உங்களை விட்டு சென்றேன். நிம்மதியாக ஒரு நாள் கூட வாழ முடியவில்லை. தினமும் மது, கஞ்சா போதையில் வீட்டுக்கு வந்து அடித்து துன்புறுத்துகிறார். அவரும், உறவினர்களும் சேர்ந்து வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துகிறார்கள்" என கூறி அழுதுள்ளார். அவரை சமாதானம் செய்து பெற்றோர் கணவர் வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் அர்ச்சனா வீட்டில் தூக்கில் தொங்கியதாகவும், அவரை அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்து இருப்பதாகவும் பெற்றோருக்கு கணவரின் உறவினர்கள் தகவல் கொடுத்தனர். உடனே, பெற்றோர் ஆஸ்பத்திரிக்கு விரைந்து சென்றனர். அங்கு அர்ச்சனா இறந்ததை அறிந்து கதறி அழுதனர்.

இதுகுறித்து அர்ச்சனாவின் தந்தை திருவட்டார் போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரில் அர்ச்சனாவின் சாவில் சந்தேகம் இருப்பதாகவும், இதற்கு காரணமானவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

அந்த புகாரின் பேரில் திருவட்டார் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இளம்பெண் தற்கொலை செய்தது தொடர்பாக ஆர்.டி.ஒ. விசாரணையும் நடக்கிறது. காதல் திருமணம் செய்த இளம்பெண் வரதட்சணை கொடுமையால் தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

 

Tags:    

மேலும் செய்திகள்