உதிரி பாகங்கள் திருடிய தொழிலாளி கைது
திருபுவனை அருகே திருவண்டார்கோவில் தொழிற்பேட்டையில் உதிரி பாகங்கள் திருடிய தொழிலாளி கைது செய்யப்பட்டார்.
திருபுவனை
திருபுவனை அருகே திருவண்டார்கோவில் தொழிற்பேட்டையில் ஹைட்ராலிக் எந்திரம் தயாரிக்கும் தனியார் தொழிற்சாலை உள்ளது. இங்கு உற்பத்திக்கு பயன்படுத்தும் உதிரிபாகங்கள் கடந்த சில நாட்களுக்கு முன் திருட்டு போனது.
இது குறித்து தொழிற்சாலையின் மனிதவள அதிகாரி ஜீவபாலன் அளித்த புகாரின்பேரில் திருபுவனை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜசேகர் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
தொழிற்சாலையில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தபோது, அங்கு ஒப்பந்த தொழிலாளியாக வேலை செய்யும் விழுப்புரம் கீழ்பெரும்பாக்கத்தை சேர்ந்த சாமுவேல்ராஜ் (வயது 33) என்பவர் உதிரி பாகங்களை திருடிச்சென்றது தெரியவந்தது. அதன் மதிப்பு ரூ.1 லட்சம் ஆகும். அவரை போலீசார் தேடி வந்தனர்.
இந்தநிலையில் நேற்று மாலை மதகடிப்பட்டு பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த சாமுவேல்ராஜை மடக்கி பிடித்து விசாரித்ததில், உதிரி பாகங்கள் திருடியதை அவர் ஒப்புக்கொண்டார். அவரிடம் இருந்து காப்பர் உதிரி பாகங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.