வட்டார வளர்ச்சி அலுவலகத்தை பெண் ஊழியர்கள் முற்றுகை

புதுவையில் பாலியல் சீண்டலில் ஈடுபடும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி வட்டார வளர்ச்சி அலுவலகத்தை பெண் ஊழியர்கள் முற்றுகையிட்டனர். அதிகாரியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2023-06-26 17:49 GMT

காரைக்கால்

பாலியல் சீண்டலில் ஈடுபடும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி வட்டார வளர்ச்சி அலுவலகத்தை பெண் ஊழியர்கள் முற்றுகையிட்டனர். அதிகாரியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

பாலியல் சீண்டல்

காரைக்கால் நேருநகர் அருகே வட்டார வளர்ச்சி அலுவலகம் இயங்கி வருகிறது. இங்கு பல்வேறு பிரிவுகளின் கீழ் ஏராளமான பெண்கள் பணிபுரிந்து வருகின்றனர். இங்கு பணிபுரியும் வட்டார வளர்ச்சி அலுவலக இணைப்பு அதிகாரி ஒருவர், அங்கு பணிபுரியும் பெண்களை சொந்தவேலை செய்ய வற்புறுத்துவதாகவும், பாலியல் சீண்டலில் ஈடுபடுவதாகவும் புகார் எழுந்தது.

முடியாது என்று கூறும் ஊழியர்களை உயர் அதிகாரிகளிடம் தெரிவித்து வேலையை விட்டு நீக்கி விடுவதாக மிரட்டி வந்ததாக கூறப்படுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன் 40 வயது திருமணமான பெண்ணை வீட்டு வேலை செய்ய மிரட்டியதாக கூறப்படுகிறது. இதனால் அந்த பெண் அலுவலகத்திலேயே மயங்கி விழுந்தார்.

வட்டார வளர்ச்சி அலுவலகம் முற்றுகை

இதுகுறித்து காரைக்கால் மகளிர் போலீஸ் நிலையத்தில் சகஊழியர்கள் புகார் அளித்தனர். அதில் பெண் ஊழியர்களிடம் அத்துமீறலில் ஈடுபடும் காரைக்கால் வட்டார வளர்ச்சி அலுவலக இணைப்பு அதிகாரி மற்றும் அவருக்கு உடந்தையாக இருக்கும் மேல் அதிகாரி ஆகிய 2 பேர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டு இருந்தனர். இருப்பினும் போலீசார் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இந்தநிலையில் குற்றம் சாட்டப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்காததை கண்டித்து 70-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் வட்டார வளர்ச்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். மேலும் வட்டார வளர்ச்சி அலுவலக அதிகாரி சச்சிதானந்திடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

பின்னர் அவர்கள் அங்கிருந்து புறப்பட்டு காரைக்கால் மாவட்ட கலெக்டர் குலோத்துங்கனை நேரில் சந்தித்து, சம்பந்தப்பட்ட 2 அதிகாரிகள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி புகார் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்