'பெண்களால் எதையும் சாதிக்க முடியும்'
மத்திய ரிசர்வ் காவல் படையின் ‘யாஷ்வினி யாத்திரை'யை முதல்-அமைச்சர் ரங்கசாமி தொடங்கி வைத்தார். விழாவில் பெண்களால் எதையும் சாதிக்க முடியும் என முதல்-அமைச்சர் ரங்கசாமி பேசினார்.
புதுச்சேரி
மத்திய ரிசர்வ் காவல் படையின் 'யாஷ்வினி யாத்திரை'யை முதல்-அமைச்சர் ரங்கசாமி தொடங்கி வைத்தார். விழாவில் பெண்களால் எதையும் சாதிக்க முடியும் என முதல்-அமைச்சர் ரங்கசாமி பேசினார்.
மோட்டார் சைக்கிள் பயணம்
சர்தார் வல்லபாய் படேல் பிறந்தநாள் வருகிற 31-ந் தேதி கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் சர்வதேச ஒற்றுமை தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது. தேசிய ஒற்றுமை தினம், பெண் குழந்தைகளை பாதுகாப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் என்ற திட்டத்தை மையாக கொண்டு 'யாஷ்வினி யாத்திரை'யை மத்திய ரிசர்வ் காவல் படையை சேர்ந்த ராணுவ வீராங்கனைகள் 60 பேர் மோட்டார் சைக்கிளில் கன்னியாகுமரியில் இருந்து குஜராத்திற்கு விழிப்புணர்வு பயணம் மேற்கொள்கிறார்கள்.
இந்தநிலையில் மத்திய ரிசர்வ் காவல் படையை சேர்ந்த ராணுவ வீராங்கனைகள் நேற்று புதுவைக்கு வந்தனர். அவர்களுக்கு புதுவை காவல்துறை சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
வழியனுப்பும் விழா
அதைத்தொடர்ந்து புதுச்சேரியில் இருந்து 'யாஷ்வினி யாத்திரை'யை வழியனுப்பும் நிகழ்ச்சி கோரிமேடு போலீஸ் மைதானத்தில் இன்று காலை நடந்தது. விழாவுக்கு முதல்-அமைச்சர் ரங்கசாமி தலைமை தாங்கினார். அமைச்சர் நமச்சிவாயம் முன்னிலை வகித்தார்.
விழாவில் போலீஸ் டி.ஜி.பி.ஸ்ரீனிவாஸ், டி.ஐ.ஜி.பிரிஜேந்திரகுமார் யாதவ், சீனியர் போலீஸ் சூப்பிரண்டுகள் நாரா.சைதன்யா, அனிராய் மற்றும் போலீஸ் சூப்பிரண்டுகள், இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் பலர் கலந்துகொண்டனர்.
விழாவில் முதல்-அமைச்சர் ரங்கசாமி பேசியதாவது:-
பெண்கள் சளைத்தவர்கள் அல்ல
கன்னியாகுமரியில் இருந்து தொடங்கி குஜராத் செல்லும் மோட்டார் சைக்கிள் பயணம் பாராட்டுக்குரியது. புதுச்சேரியில் இந்த `யாஷ்வினி யாத்திரை'யை தொடங்கி வைப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். நாட்டின் பாதுகாப்புக்கு தங்களை அர்ப்பணித்துக்கொண்ட வீரர்களுக்கு மத்தியில் வீராங்கனைகள் இடம்பெற்றிருப்பது பெருமையாக உள்ளது.
பெண்கள் எதற்கும் சளைத்தவர்கள் அல்ல என்பதை நிரூபித்து வருகிறீர்கள்.சி.ஆர்.பி.எப். போலீசார் பாகுபாடின்றியும், சட்டம்-ஒழுங்கை பாதுகாப்பதில் கடுமையாக நடந்து கொள்வதால் மக்கள் மத்தியில் பயம் நீ்ங்கி உள்ளது. நாட்டிற்கு வெளிநாடுகளில் இருந்தும், உள்நாட்டிலும் அச்சுறுத்தல்கள் உள்ளது. அவற்றை போராடி வென்று நாட்டு மக்களின் பயத்தை நீக்கி மகிழ்ச்சியுடன் வாழும் சூழ்நிலையை உருவாக்கும் சிறந்த பணியை செய்து வருகிறார்கள்.
நாட்டின் ஒற்றுமை முக்கியம்
மேலும் இயற்கை சீற்றம் மற்றும் உள்நாட்டு அச்சுறுத்தல் நேரங்களில் அவற்றை சரியாக கையாளும் விதம் வரவேற்கதக்கது. இந்த மோட்டார் சைக்கிள் பயணம் பெண்களால் எதையும் சாதிக்க முடியும் என்பதை எடுத்துக்காட்டும் வகையில் அமைந்துள்ளது.
நாட்டின் ஒற்றுமை மிக முக்கியமான ஒன்று. உலக அளவில் சிறந்த நாடாக இந்தியா திகழ்கிறது. பிரதமர் மோடி நாட்டின் வளர்ச்சியை மேம்படுத்த வேண்டும் என்ற நோக்கில் மக்களும், பெண்களுக்கான திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். நாட்டின் ஒற்றுமையை வலுப்படுத்த வேண்டும். பயணம் வெற்றி அடைய வாழ்த்துக்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
அதைத்தொடர்ந்து முதல்-அமைச்சர் ரங்கசாமி, அமைச்சர் நமச்சிவாயம் மற்றும் போலீஸ் அதிகாரிகள் ஆகியோர் மத்திய ரிசர்வ் காவல்படையின் மோட்டார் சைக்கிள் பயணத்தை கொடி அசைத்து தொடங்கி வைத்தனர். இவர்கள் வருகிற 31-ந் தேதி குஜராத் சென்றடைந்து சர்தார் வல்லபாய்படேல் பிறந்தநாள் விழாவில் கலந்துகொள்கிறார்கள்.